தமிழகத்தில் கள்ளச்சாராயத்தால் பலர் உயிரிழந்துள்ள நிலையில், அதற்கு பொறுப்பேற்க வேண்டிய அமைச்சரோ பொறுப்பேற்காமல், அதிமுக மீது குறை சொல்லி கொண்டிருப்பதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டியுள்ளார்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே சீராப்பள்ளி மற்றும் நாமகிரிப்பேட்டையில் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமியின் பிறந்தநாளையொட்டி முன்னாள் அமைச்சர் தங்கமணி கழக கொடியெற்றி, ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். முன்னதாக சீராப்பள்ளி பகுதியில் கொடியேற்ற வருகை தந்த முன்னாள் அமைச்சர் தங்கமணிக்கு, அதிமுகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இதனையடுத்து திமுக உள்ளிட்ட மாற்றுக்கட்சியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் முன்னாள் அமைச்சர் தங்கமணி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். அதிமுகவில் இணைந்தவர்களை முன்னாள் அமைச்சர் தங்கமணி சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் சரோஜா உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்துக் கொண்டனர். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, கழக பொதுசெயலாளர் பிறந்தநாளையொட்டி, கொடியேற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவாக கொண்டாடி வரும் வேளையில், ஏராளமான பொதுமக்களும், இளைஞர்களும் வெயில் என்றும் பாராமல் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பது, அவர்கள் திமுக அரசு மீது கொண்டுள்ள வெறுப்பை காட்டுவதாக தெரிவித்தார்.
மேலும் இவ்விழாவிற்காக கொடிக்கம்பங்கள் நடும்போது வருவாய்த்துறை உள்ளிட்ட அதிகாரிகள் ஜேசிபி இயந்திரங்களை கொண்டு கொடி கம்பங்களை பிடுங்க முயன்றதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார். இதனையடுத்து சட்டத்திற்கு கட்டுப்படுகிறோம் எனவும், மற்ற கொடி கம்பங்களையும் பிடுங்குங்கள் எனக்கூறிய பிறகு, கொடி கம்பம் நட அனுமதித்ததாக கூறினார்.
டாஸ்மாக் விற்பனையாளரே மதுபாட்டில்களுக்கு 10 ரூபாய் அதிகம் வாங்க என்ன காரணம் என தெரிவித்ததை சுட்டிக்காட்டிய முன்னாள் அமைச்சர் தங்கமணி, தமிழகம் முழுவதும் சந்து கடைகளில் கள்ளச்சாராய விற்பனை உயர்ந்துவிட்டது எனவும் குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் கள்ளச்சாராய மரணம் உயர்ந்துள்ளது என்றும், ஆனால் மின்துறை அமைச்சரும், உயர்கல்வி துறை அமைச்சரும், அதிமுக ஆட்சியில் 20 பேர் இறந்துவிட்டதாக பொய்யான தகவலை மக்களை திசை திருப்புவதற்காக பரப்பி வருவதாக முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார்.
மின்சாரத்துறை அமைச்சர் சட்டசபையில் மானிய கோரிக்கையின்போது, கொள்கை விளக்க குறிப்பிலேயே கடந்த 14 ஆண்டுகளாக கள்ளச்சாராயம் இல்லை எனக்கூறியதை நினைவு கூர்ந்த முன்னாள் அமைச்சர் தங்கமணி, தற்போது இதுபோன்ற சம்பவம் அரங்கேறிய பின்னர் பொறுப்பேற்க வேண்டிய அமைச்சரே பொறுப்பேற்காமல் அதிமுக மீது குறை சொல்லி கொண்டிருப்பதாக விமர்சித்தார்.தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துவிட்டது அதனை கட்டுப்படுத்துங்கள் என எதிர்கட்சித்தலைவர், விடியா அரசுக்கு எச்சரிக்கை விடுத்தும், அதனை கட்டுப்படுத்த இந்த அரசு தவறியதாலேயே, இளைஞர்கள் போதைக்கு அடிமையாகும் சூழலில் இருந்து வருகின்றனர் என முன்னாள் அமைச்சர் தங்கமணி குற்றம் சாட்டினார்.