தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்த வாரம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி கள்ளச்சாராய உயிர்பலிகள்தான். டாஸ்மாக்கில் விநியோகிக்கப்படும் பானங்களை குடிப்பதன் மூலம் மட்டும் உயிர்பலிகள் நடைபெறவில்லை. ஆனால் கள்ளச்சாராயம் குடிப்பதனால் மட்டும் ஏன் உயிரிழப்பு ஏற்படும் அளவிற்கான ஆபத்துகள் ஏற்படுகின்றன.
ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுபானமாக இருந்தாலும் சரி, கள்ளச்சாராயமாக இருந்தாலும் சரி அதன் தயாரிப்பு முறை ஒன்றுதான். இங்கு ஆலைகளில் தயாரிக்கப்படும் மதுவை தர நிர்ணயம் செய்ய அதற்கென படிப்பு படித்தவர்கள் இருப்பார்கள். ஆனால் கள்ளச்சாராயத்தினைக் காய்ச்சுபவரே தர நிர்ணயம் செய்வார். அவருக்கு அதைப் பற்றின புரிதல் இருக்காது.
குறிப்பாக ஆலைகளில் காய்ச்சப்படும் மதுக்களில் மெத்தனால் அளவு துளி கூட இருக்காது. இதனை Rectified Sprit என்று சொல்வார்கள். இந்த ரெக்டிஃபைடு ஸ்பிரிட்டினை காய்ச்சும்போதே மெத்தனால் உருவாகும். இதனை ஆலைகளில் பிரித்து எடுத்து சுத்தமான ரெக்டிஃபைடு ஸ்பிரிட் மூலம் புதிய மதுவகைகளை தயார் செய்வார்கள். ஆனால் கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் இந்த ரெக்டிஃபைடு ஸ்பிரிட்டுடன் கலந்திருக்கும் மெத்தனாலை கவனிக்காமல் விட்டுவிடுகிறார்கள். மெத்தனால் ஒரு நச்சுத்தன்மை வாய்ந்த வேதிப்பொருள். அதனை உட்கொள்வதன் மூலம் உடனடியான மரணம் ஏற்படுகிறது.
வல்லுநர்கள் கூற்றுப்படி, மெத்தனாலை ஒரு நாளைக்கு 2 மி.கி எடுத்துக்கொண்டால் எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதுவே 10 மிலி எடுத்துக்கொள்ளும்போது பார்வை நரம்பினை பாதித்து முற்றிலுமாக பார்வையை இழக்க நேரிடும். அதுவே 30 மிலி என்றால், இறப்பதைத் தவிர வேறு வழியில்லை. மேலும் இது ஒரு மனிதனின் எடை, உயரம் ஆகியவற்றைப் பொருத்து மாறுபடும். மரக்காணம் சம்பவத்தில் முப்பது மிலிக்கு மேலும் இறந்தவர்கள் மெத்தனாலை அருந்தியிருக்கலாம் என்று சொல்லப்படுகிறது.