வெளிநாடு சென்று வந்ததை மறைப்பது கிரிமினல் குற்றம்: கேரள அரசு எச்சரிக்கை!

வெளிநாட்டிற்கு சென்றுவந்ததை மறைப்பது கிரிமினல் குற்றம் என்று கேரள அரசு அம்மாநில மக்களை எச்சரித்துள்ளது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் தடம் பதித்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கேரளாவில் ஒரே குடும்பத்தைச்சேர்ந்த 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இத்தாலிக்குச் சென்றுவந்த 5 பேர், ஏர் போர்ட்டில் நடைபெற்ற சோதனையை தவிர்த்துவிட்டு ஊர் திரும்பியதாக கூறப்படுகிறது. இவர்கள் அனைவருக்கும் கொரோனா அறிகுறிகள் இருப்பது அறிந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களை சோதனை செய்ததில் 5 பேருக்கும் கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது.

சீனாவின் வூஹான் மாகாணத்திலிருந்து இந்தியா திரும்பிய மூன்று பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது உறுதியானது. இந்தியாவில் கொரோனா வைரஸ் கணக்கு கேரளாவில் இருந்து தொடங்கியது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், கேரள சுகாதாரத்துறையின் தீவிர முயற்சியால், நல்வாய்ப்பாக அனைவரும் நலம்பெற்று வீடு திரும்பினர். இதற்குப் பிறகு கேரள சுகாதாரத்துறை மிகுந்த எச்சரிக்கையாக கண்காணித்து வருகிறது. இந்நிலையில், இத்தாலியில் இருந்து கேரளா திரும்பிய 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது அம்மாநிலத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் அனைவரும் பத்தனம்திட்டா மாவட்டம் ரன்னி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்று கூறப்படுகிறது.

கொரோனா பாதிப்பு இருக்கும் நாடுகளில் ஒன்றான இத்தாலியில் இருந்து நாடு திரும்பியதை அவர்கள் மறைத்துள்ளது அறிந்து கேரள அரசு அதிர்ச்சியடைந்துள்ளது. இதனையடுத்து, அம்மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு சென்றுவிட்டு நாடு திரும்பினால் அதுகுறித்த தகவலை அதிகாரிகளிடம் தெரிவிக்க வேண்டும் என்றும், அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கிறதா என்று சோதனை செய்யப்பட்டு 28 நாட்கள் தொடர்கண்காணிப்பில் வைக்கப்படுவார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.

கேரள காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து ஊர் திரும்பியவர்கள் யாருக்கேனும் கொரோனா அறிகுறிகள் இருந்தால் அது குறித்து உடனடியாக சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவிக்கவேண்டும் என்றும், அவ்வாறு தெரிவிக்காமல் இருப்பது கிரிமினல் குற்றம் என்றும் தெரிவித்துள்ளது. அவ்வாறு தகவல் அளிக்காதவர்களுக்கு சிறைதண்டனை வழங்க நேரிடும் என்றும், இந்த நடைமுறைகளை அனைத்து அரசு துறைகளும் பின்பற்றவேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

இத்தாலியில் இருந்து வந்த மூன்று பேர் விமான நிலையத்தில் நடைபெறும் சோதனைகளை தவிர்த்துவிட்டு ஊர்திரும்பியுள்ளனர். அவர்களுக்கு ஏற்கனவே கொரோனா பாதிப்பு இருந்த நிலையில், அவர்களை சந்திக்கச் சென்ற அவர்களது உறவினர்களுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்று கேரள சுகாதாரத்துறை அமைச்சர் ஷைலஜா தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version