நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்பாக, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஆஜராகினர். சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக, நீதித்துறை நடுவர் விசாரணை நடத்தினார். அப்போது, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குமார், துணை காவல் கண்காணிப்பாளர் பிரதாபன் ஆகியோர் நீதித்துறை நடுவரிடம் உரிய ஆவணங்களை சமர்ப்பிக்காமலும், விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்காமலும் அவமதித்ததாக, உயர்நீதிமன்ற மதுரைக் கிளைக்கு புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன், நீதித்துறை நடுவரை அவமதித்ததாக கூறப்படுகிறது. அதனடிப்படையில், உயர்நீதிமன்ற மதுரை கிளை தாமாக முன்வந்து 3 பேர் மீதும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளது. 3 பேரும், நேரில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரைக் கிளை, அவர்களை பணியிட மாற்றம் செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியது. இதையடுத்து, தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர், துணை காவல் கண்காணிப்பாளர் ஆகியோர், காத்திருப்பு பட்டியலுக்கு மாற்றப்பட்டனர். சாத்தான்குளம் காவல் நிலைய காவலர் மகாராஜன் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில், 3 பேரும் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் கொண்ட அமர்வு முன்னிலையில் நேரில் ஆஜராகினர்.
Discussion about this post