ஊரடங்கு கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து நிபுணர் குழு அளிக்கும் பரிந்துரை குறித்து, மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று ஆலோசனை நடத்தவுள்ளார். இந்தியாவில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில், மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், மத்திய அரசு வெளியிட்ட ஆணையின்படி, இன்றைய தினத்திலிருந்து எந்தெந்த புதிய தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவை நிறுவனங்கள் இயங்கலாம் என்பதைப் பற்றி மாநில அரசு முடிவெடுத்து அறிவிக்கவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது. இதற்கென தமிழக அரசு ஒரு வல்லுநர்கள் குழுவை நியமித்துள்ளது. அந்தக் குழு முதற்கட்ட கூட்டத்தை நடத்தி, முதற்கட்ட ஆலோசனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியிடம் இன்று சமர்ப்பிக்க உள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று 12 மணியளவில், மூத்த அமைச்சர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்துகிறார். பின்னர், ஐ.ஏஎஸ் அதிகாரிகளைக் கொண்ட குழுக்களுடன் ஊரடங்கு உத்தரவை தளர்த்துவது தொடர்பாக ஆலோசனை மேற்கொள்கிறார். பின்னர், ஊரடங்கில் எந்தெந்த கட்டுப்பாடுகளை தளர்த்துவது என்பது குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Discussion about this post