சென்னை தீவுத்திடலில் பேரிடர் காலங்களில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் குறித்த கண்காட்சி

பேரிடர் காலங்களில் மனிதாபிமானத்துடன் உதவுவது மற்றும் நிவாரண பயிற்சிகள் குறித்து விளக்கும் வகையில், சென்னை தீவுத்திடலில் நடைபெற்ற கண்காட்சி, மாணவர்களின் ஆர்வத்தை ஈர்த்துள்ளது.

புயல், வெள்ளம், சுனாமி, போன்ற இயற்கை பேரிடர் காலங்களில், மனிதாபிமானத்துடன் உதவுவது மற்றும் நிவாரண பயிற்சி என்ற தலைப்பில், வருவாய்துறை சார்பில் கருத்தரங்கம், ஒத்திகை மற்றும் கண்காட்சி நடைபெற்றது. சென்னை தீவுத்திடலில் இரண்டு நாள் நடைபெற்ற கண்காட்சியில், தீயணைப்புத் துறை, பேரிடர் மீட்புக் குழு, தேசிய பேரிடர் மீட்புக் குழு, சுகாதாரத்துறை, கடற்படை, விமானப்படை உள்ளிட்ட, 13 துறைகள் சார்பில், 23 அரங்கங்கள் அமைக்கப்பட்டிருந்தன.

பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும், பல்வேறு கருவிகள், அதாவது, விமானம் தீ பிடித்தால் இரண்டு நிமிடங்களுக்குள் அணைக்கும் நவீன தீயணைப்பு வாகனம், நிலச்சரிவில் பாதிக்கபட்டால் உடனடியாக காப்பாற்றும் கருவிகள், வெள்ளத்தில் இருந்து மக்களை காப்பாற்ற உதவும் படகு உபகரணங்கள், தீயால் பதிக்கப்பட்டால் காப்பற்ற உதவும் ரோபோக்கள், தற்காலிக மருத்துவ முகாம்கள், வெடிகுண்டுகளை கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள், உயர்கட்டிடங்களில் தீப்பிடித்தால் மக்களை பாதுகாக்க உதவும் க்ரேன்கள் உள்ளிட்ட பல்வேறு இயற்கை பேரிடர் மீட்பு உபகரணங்கள் கண்காட்சியில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தன.

பேரிடர் காலங்களில் மீட்பு மற்றும் தேடல் பணிகளில் ஈடுபடுவதற்காக, நவீன தகவல் தொடர்பு சாதனங்கள் தேவைப்படுகின்றன. இந்த சாதனங்களை கொள்முதல் செய்ய, தமிழக முதல்வர் 170 கோடியே 31 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளதாகவும், இந்த நவீன கருவிகளின் கண்காட்சி, பேரிடர்களை நம்மால் எதிர்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் ஏற்படுத்தும் என்கிறார் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்.

பேரிடர் காலங்களில் பயன்படுத்தப்படும் அனைத்து வகையான நவீன கருவிகளும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் இந்த கண்காட்சியினை, பள்ளி, கல்லூரி மாணவர்கள் ஆர்வமுடன் கண்டுகளித்தனர். மேலும், பேரிடர் காலங்களில் எவ்வாறு மீட்பு பணியில் ஈடுபடுகிறோம் என்பது குறித்து தங்களுக்கு விளக்கங்களும் அளிக்கப்படுவது மிகவும் பயனளிப்பதாகவும், ஆர்வத்தை தூண்டும் வகையிலும் உள்ளதாகக் கூறுகின்றனர் மாணவர்கள்.

பேரிடர் காலங்களை எதிர்கொள்ள நாம் பயன்படுத்தும் நவீன உபகரணங்கள் காட்சிப்படுத்தப்பட்டிருந்த இக்கண்காட்சி, மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் இயற்கை சீற்றங்கள் எதிர்கொள்வது குறித்த மிகுந்த நம்பிக்கை ஏற்படுத்தி உள்ளது என்றே கூறலாம்.

Exit mobile version