தேர்தலையொட்டி வருமான வரித்துறை மூலம் ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கும் கண்காணிக்கப்பட்டு வருவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு தெரிவித்துள்ளார்.
சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சத்யபிரதா சாஹு, அனைத்து வங்கி அதிகாரிகளுடன் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் வங்கிக் கணக்குகள் மற்றும் பணப் பரிமாற்றங்கள் குறித்து தொடர்ந்து கண்காணிக்க அறிவுறுத்தப்பட்டதாக அவர் தெரிவித்தார். வங்கிக் கணக்குகளில் 10 லட்சம் ரூபாய்க்கு மேல் வரும் வரவுகள் குறித்து வருமான வரித்துறையின் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தி உள்ளதாகவும் கூறினார்.
பணப் பரிமாற்றத்தில் வித்தியாசங்கள் காணப்படும் வங்கிக் கணக்குகள், சந்தேகப் பட்டியலில் வைக்கப்பட்டு கண்காணிக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார். இதேபோல ஆன்லைன் பணப் பரிமாற்றங்களும் வருமான வரித்துறை கண்காணிப்பில் உள்ளதாக அவர் கூறினார்.
தமிழகத்தில் நடத்தப்பட்டுள்ள தேர்தல் நடவடிக்கையில் 12 கோடியே 80 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், கடந்த 19ம் தேதி மட்டும் 3 கோடியே 76 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். இதுதொடர்பாக 210 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 3 ஆயிரத்து 166 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.