ஈரோடு கிழக்கு..அதிமுகவின் இலக்கு..திமுகவை விலக்கு! [பகுதி ஒன்று]

ஈரோடு கிழக்குத் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுகவினர் சுறுசுறுப்பாகவும் துடிப்புடனும் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகிறார்கள். அதிமுக கழகத்தின் இடைக்காலப் பொதுசெயலாளரும் எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்கள் கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ். தென்னரசினை ஆதரித்து சூறாவளிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தார். இன்னும் இரண்டு நாட்கள் பிரச்சாரத்தில் ஈடுபட உள்ளார். எதிர்கட்சித் தலைவரின் வருகையினையொட்டி திமுகவினர் தங்களது அராஜத்தை செய்ய ஆரம்பித்துவிட்டனர். இந்தியாவிலேயே, ஏன் உலகிலேயே ஒரு அரசியல் கட்சி வாக்காளர்களை அடைத்துவைத்து இன்னொரு கட்சியின் கூட்டத்திற்கு செல்லக்கூடாது என்று சொல்லும் அளவிற்கு தனது அதிகாரத்தினை தவறான வழியில் பயன்படுத்தியிருப்பது திமுகதான்.

ஈரோட்டிற்கு அதிமுக என்ன செய்தது?

ஈரோட்டிற்கு அதிமுக என்னெ செய்தது என்று பலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஈரோடு எனும் மாவட்டத்தை உருவாக்கியதே அதிமுகதான். புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சியில் 1979 ஆம் ஆண்டு வாக்கில் கோயமுத்தூரில் இருந்து ஆகஸ்ட் 31 ஆம் தேதி பிரிக்கப்பட்டு ஈரோடு உதயமானது. புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் ஆட்சிகாலத்தில் 2012ஆம் ஆண்டில் பவானி மற்றும் கோபிசெட்டிபாளையம் வட்டங்கள் மறுவரையறை செய்யப்பட்டு புதியதாக அந்தியூர் வட்டம் அமைக்கப்பட்டது. மேலும்  20.01.2016 அன்று ஈரோடு வட்டம் பிரிக்கப்பட்டு கொடுமுடி மற்றும் மொடக்குறிச்சி வட்டங்கள் அமைக்கப்பட்டன. அதேபோல  09.02.2016 அன்று சத்தியமங்கலம் வட்டம் பிரிக்கப்பட்டு தாளவாடி வட்டம் அமைக்கப்பட்டது. இவையெல்லாம் ஒருபுறம் இருக்க தற்போதைய எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆட்சிகாலத்தில் நவீன வசதிகள் கூடிய சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவமனைக் கட்டப்பட்டது. ஈரோடு மொத்தத்திற்கும் சொன்னால் அது அதிகம். போய்க்கொண்டே இருக்கும்.எனவே தற்போது ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மட்டும் என்னென்ன செய்திருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.

ஈரோடு கிழக்கில் அதிமுகவின் சாதனை :

திரு. எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் ஆட்சிகாலத்தில் ஈரோடு கிழக்கில் 36 இடங்களில் ஆழ்துளைக் கிணறு அமைக்கப்பட்டு மக்களின் குடிநீர் தேவையை அதிமுக நிவர்த்தி செய்தது. காவிரி நதியிலிருந்து சுத்தமான நீர் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. மேலும் அன்றைக்கே திரு கே.எஸ்.தென்னரசு அவர்கள் சட்டமன்ற உறுப்பினராக இருந்தபோது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பத்தொன்பது அங்கன்வாடி மையங்கள் அமைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அதே தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து பதினொரு பகுதிகளில் நியாயவிலைக் கடை கட்டிடம் அமைக்கப்பட்டது. இதைத் தவிர பத்தொன்பது இடங்களில் பேருந்து நிழற்குடை அமைக்கப்பட்டிருக்கிறது. ஈரோடு கிழக்கில் நெசவு மக்கள் அதிகம். குறிப்பாக விசைத்தறித் தொழிலாளர்களும், கைத்தறித் தொழிலாளர்களும் அதிகம். விசைத்தறித் தொழிலாளர்களின் மின்சாரத்தேவைக்கு 750 யூனிட் வழங்கப்பட்டது. கைத்தறி தொழிலாளர்களுக்கு 200 யூனிட் மின்சாரம் வழங்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பலத்திட்டங்கள் ஈரோடு கிழக்கிற்காக அதிமுக செய்திருக்கிறது.

ஈரோட்டிற்கு திமுக என்ன செய்தது?

ஈரோட்டிற்கு திமுக இன்றுவரை எந்த நலத்திட்டங்களையும் சரிவர செய்ததில்லை. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலையொட்டி மக்களுக்கு சிக்கன், பணம், குக்கர், வெள்ளிக்கொலுசு, புடவை போன்றவற்றை வழங்கியும் பரோட்டா, போண்டா சுட்டு காண்பித்து பாவனைகள் செய்தும் ஓட்டுப் பிச்சைக் கேட்டுவருகிறது திமுக. மேலும் சில அமைச்சர்கள் வீதி வீதியாய் ஓடி சென்று ஓட்டுக் கேட்கிறார். இத்தனைக்கும் திமுகவின் நேரடி வேட்பாளர் யாரும் களமிறங்கவில்லை. கூட்டணிக் கட்சி வேட்பாளருக்கே இந்த அலப்பறை என்றால், திமுக நேரடியாக இறங்கியிருந்தால் எந்தெந்த உச்சத்திற்கு செல்வார்களோ என்று நினைக்கவே திகட்டுகிறது. தோல்வி பயம் மனிதர்களை எப்படியெல்லாம் ஆட்டிவைக்கிறது பாருங்கள்.

(தொடரும்..)

Exit mobile version