விருத்தாசலம் அருகே பள்ளிப்பட்டு பகுதியில் திமுக ஆட்சியில் கட்டப்பட்ட சமத்துவபுர வீடுகள் தற்போது இடிந்து விழும் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த 2001ம் ஆண்டு, திமுக ஆட்சியின் போது சமத்துவபுர கிராமம் என்ற பெயரில் 100 குடும்பங்களுக்கு அப்போதைய விருத்தாசலம் தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினர் குழந்தை தமிழரசானால் திறக்கப்பட்டது.
தரமற்ற முறையில் மண், சிமெண்ட் கலவை, கம்பிகள், மற்றும் கதவுகள் பயன்படுத்தப்பட்டு இருப்பதால், மேற்கூரைகள், சுற்றுசுவர் என அனைத்தும் இடிந்து விழுந்து கொண்டிருப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர்.
இதனிடையே ஆறுமுகம் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில், அதிர்ஷ்டவசமாக குடும்பத்தில் உள்ள அனைவரும் உயிர் தப்பினர்.
சமத்துவபுர வீடுகளில் ஆனி கூட அடிக்க முடியவில்லை என்றும், அவ்வாறு ஆனி அடிக்க முற்பட்டால் சுவர்களில் விரிசல் எற்படுவதாகவும் மக்கள் கூறுகின்றனர். சமையல் செய்யும் போதும், இரவு நேரங்களில் தூங்கும் போதும் உயிருக்கு எவ்வித உத்திரவாதம் இல்லாமல் இருப்பதாகவும் அவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். சமத்துவபுர வீடுகள் முழுவதும் தரமற்ற வகையில், திமுக ஆட்சியில் கட்டப்பட்டதாக அப்பகுதி மக்கள் வேதனையுடன் கூறுகின்றனர்.
திமுக ஆட்சியில் கட்டி கொடுக்கப்பட்ட வீடுகளில், மழை பெய்யும் போது, மேற்கூரை வழியாக தண்ணீர் வீட்டிற்குள் வருவதால், பாத்திரங்கள் வைத்து சிந்தும் தண்ணீரை பிடிக்கும் அவல நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளதாக கூறுகின்றனர் அங்குள்ள மக்கள்.
நாள்தோறும் அச்சத்துடனே வாழ்வதாக கூறும் அப்பகுதி மக்கள், தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
Discussion about this post