ஈரோடு கிழக்குத்தொகுதி இடைத்தேர்தலினை முன்னிட்டு அதிமுக சார்பாக வேட்பாளர் அறிமுகக் கூட்டமானது எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் தலைமையில் ஈரோட்டில் நடைபெற்று வருகிறது. மேலும் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி. வேலுமணி, தங்கமணி, கே.சி.கருப்பணன், திண்டுக்கல் சீனிவாசன் மற்றும் அதிமுக வேட்பாளர் கே.எஸ். தென்னரசு ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர். அனைவருக்கும் தனது பொன்னான வணக்கத்துடன் உரையினைத் தொடங்கினார் எதிர்கட்சித் தலைவர்.
அவர் பேசியதாவது, இன்று தமிழகம் மட்டுமின்றி இந்தியாவே ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலினை எதிர்பார்த்து வருகிறது. நமது கழகத்தின் வெற்றி வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு அவர்கள் களம் இறங்கியுள்ளார். அவருக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள் என்று தொண்டர்களையும் பொதுமக்களையும் பார்த்து கேட்டுக்கொண்டார். இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்தலின் வெற்றி வருங்கால நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்று கூறினார். நமது முன்னாள் முதல்வர் புரட்சித் தலைவி அம்மா அவர்கள் 2016ல் நடைபெற்ற ஏற்காடு இடைத்தேர்தலில் வென்றார் பிறகு நாடாளுமன்றத் தேர்தலில் 39 இடங்களையும் வென்று இந்தியாவின் மூன்றாவது பெரிய கட்சியாக அதிமுகவை மாற்றினார் என்று புகழாரம் சூட்டினார். அதுவும் ஏற்காடு சட்டமன்றத் தேர்தலில் நாம் 78,000 ஓட்டு வித்தியாசத்தில் வென்றோம் என்று குறிப்பிட்டார்.
மேலும் தொடர்ந்து பேசிய அவர், இன்றைக்கு திமுக பதவியேற்று எந்தவித நலத் திட்டத்தையும் நிறைவேற்றவில்லை. மாறாக மக்களை ஏமாற்றி போலி வாக்குறுதிகளை அளித்து ஆட்சி பீடத்தில் அமர்ந்துள்ளது என்று குறிப்பிட்டார். ஈரோடு என்ற மாவட்டம் உருவானதே பொன்மனச்செம்மல் எம்.ஜி.ஆர் அவர்களின் ஆட்சிகாலத்தில்தான். கோயமுத்தூர் மாவட்டத்திலிருந்து பிரித்து ஈரோட்டைத் தலைநகராகக் கொண்டு இந்த மாவட்டத்தை உருவாக்கி அதன் வளர்ச்சிக்கு அடித்தளம் போட்டது அதிமுக என்று எதிர்கட்சித் தலைவர் உரையாற்றினார். புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, புரட்சித் தலைவி அம்மா காலத்திலும் சரி, அவர்களின் மறைவுக்கு பின்பும் சரி அதிமுக பல்வேறு நலத்திட்டங்களை மக்களின் நலனின் அக்கறைக்கொண்டு செய்துள்ளது. பொதுமக்கள் அதிமுக ஆட்சியில் பல்வேறு நலத்திட்டங்களைப் பெற்றுள்ளனர்.
தமிழகம் ஏற்றம் பெற வேண்டுமானால் பொருளாதாரத்தில் தமிழகத்தில் மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல தொழிற்சாலைகளை தமிழகத்தில் அமைத்தார். அதன்மூலம் பல இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினைப் பெற்றுத் தந்தார். ஈரோடு மாவட்டத்தைப் பொறுத்தவரை இரண்டு பிரதான தொழில்கள். ஒன்று வேளாண்மை இன்னொன்று ஜவுளி. இரண்டு தொழிலுக்கும் முக்கியத்துவம் கொடுத்து புரட்சித் தலைவி அவர்கள் பல நல்லத் திட்டங்களைக் கொண்டு வந்தார்கள் என்று தொடர்ந்து பேசினார்.
(தொடரும்…)
Discussion about this post