ஜூலை 11-ம் தேதி சட்ட விதிகளின்படி நடைபெற்ற சிறப்பு பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பினை ஒன்றரைக் கோடி கழகத் தொண்டர்கள் சார்பாக வரவேற்பதாக அதிமுக இடைக்காலப் பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், திமுக அரசின் அராஜகத்தில் இருந்து தமிழக மக்களை காக்க நாம் ஆற்றும் அரும்பணிகளுக்கு தடையாக, உடனிருந்தே சில சுயநல விஷமிகள் செயல்படுவதாகவும், இவர்களின் கெடுமதிகளை முறியடிக்க நீதி, நேர்மை, நாணயத்தை நம்பி, கழகத் தொண்டர்கள் போராடி வரும் நிலையில், இன்றைய தினம் தர்மம், நீதி வென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஜூலை 11-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்பினை மிகுந்த மன மகிழ்ச்சியுடன் வரவேற்பதாகவும், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், அறிவிப்புகளும், முடிவுகளும் செல்லும் என்பது வரவேற்கத்தக்கது என்றும் கூறியுள்ளார்.
மேலும், இந்த சட்டப் போராட்டத்தில் தன்னோடு துணை நின்ற தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்ட கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார். அனைத்து செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், சட்ட வல்லுநர்கள், கழக நிர்வாகிகள் மற்றும் கோடிக்கணக்கான தொண்டர்களுக்கும் நன்றி தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post