ஆறு சிக்சர் அடிக்கவிட்ட பவுலர் மட்டுமில்ல… 600 விக்கெட்டுகள் எடுத்த பவுலர்! ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு!

ஸ்டூவர்ட் பிராட் என்று சொன்னவுடன் 2007 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவில் நடைபெற்ற இருபது ஓவர் உலகக் கோப்பைப் போட்டியில் நம் இந்திய ஜாம்பவான் யுவராஜ் சிங், பிராட் ஓவரில் ஆறு பாலுக்கு ஆறு சிக்சர்களை பறக்கவிட்டதுதான் நினைவுக்கு வரும். யானைக்கும் அடி சறுக்கும் என்கிற பழமொழியின் உண்மைத் தன்மை பிராட்-க்கு பொருந்தும் என்றாலும், அன்றைய நாயகன் யுவராஜ் தான். சரி இப்போது எதற்காக பிராட் பேச்சினை நாம் எடுத்துள்ளோம் என்றால், இங்கிலாந்து அணிக்காக அயராது பந்துவீசி முக்கியத் தருணங்களில் பல விக்கெட்டுகளை கைப்பற்றி அணியை முன்னோக்கி கொண்டு சென்றவர்களில் பிராட்-டும் ஒருவர். அவர் தற்போது தன்னுடைய ஓய்வினை அறிவித்துள்ளார்.

இங்கிலாந்து அணிக்கும் ஆஸ்திரேலியா அணிக்கும் ஆஷஸ் தொடரானது இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. அதில் ஏற்கனவே ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகளை வென்றுவிட்டது. இங்கிலாந்து ஒரு போட்டியை வென்றுவிட்டது. மற்றொருப் போட்டி மழையால் கைவிடப்பட்டது. தற்போது ஐந்தாவது மற்றும் இறுதி ஆஷஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டிதான் ஸ்டூவர்ட் பிராட்-டின் இறுதிப் போட்டியாம். இதனை ஸ்டூவர்ட் பிராடே முன்வந்து அறிவித்துள்ளார். அவருடன் இருக்கும் சக ஜாம்பவான் பவுலரான ஜேம்ஸ் ஆண்டர்சன் 41 வயது ஆகியும் தொடர்ந்து விளையாடுவேன் என்று கூறியுள்ளார். ஆனால் 37 வயதான ஸ்டூவர்ட் பிராட் ஓய்வு அறிவித்துள்ளது ரசிகர்களிடையே பெரும் வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்துள்ளது.

ஓய்வுகுறித்து பத்திரிகையாளர்களிடமும் செய்தியாளர்களிடமும் பிராட் கூறியது பின்வருமாறு உள்ளது. 

ஓவலில் நடக்கும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் எனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வருகிறது. இது ஒரு அற்புதமான பயணம். நாட்டிங்காம்ஷைர் கவுண்டி மற்றும் இங்கிலாந்து அணிக்காக என்னால் முடிந்த அளவுக்கு நிறைய போட்டிகளில் விளையாடியது மிகப்பெரிய கவுரவம். நான் பங்கெடுத்துள்ள சிறப்பு வாய்ந்த இந்த ஆஷஸ் தொடரை எப்போதும் உயரிய நிலையில் முடிக்கவே விரும்புகிறேன். நான் விளையாடிய போட்டிகளில் மிகவும் உற்சாகமான, ரசிகர்களுக்கு விருந்து படைத்த ஒரு தொடர் இது தான். ஓய்வு பெறுவது குறித்ஹ்டு சில வாரங்களாக யோசித்து வந்தேன். இங்கிலாந்து – ஆஸ்திரேலியா இடையிலான ஆஷஸ் போட்டியே என்னை பொறுத்தவரை கிரிக்கெட்டில் எப்போதும் உச்சப்பட்ச போட்டி. ஆஷஸ் கிரிக்கெட்டுடன் எனக்குள் இனம்புரியாத மோகம் உண்டு. எனவே எனது கடைசி பேட்டிங் மற்றும் பந்துவீச்சு ஆஷஸ் கிரிக்கெட்டில் அமைய வேண்டும் என்று விரும்பினேன். வெள்ளிக்கிழமை இரவு ஓய்வு முடிவை எடுத்தேன். கிரிக்கெட்டில் இருந்து விடைபெறுவதற்கு இதுதான் சரியான தருணம் என்று தோன்றியது. கேப்டன் பென் ஸ்டோக்சிடமும், மறுநாள் காலையில் சக வீரர்களிடமும் எனது முடிவை தெரிவித்தேன். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக மட்டும் 150 விக்கெட்டுகளை வீழ்த்தியது என்னை பெருமைப்பட வைக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒவ்வொரு தருணைத்தையும் அனுபவித்து பவுலிங் செய்தேன்.

இவ்வாறு பிராட் செய்தியாளர்களிடம் குறிப்பிட்டுருந்தார்.

இலங்கைக்கு எதிராக 2007 ஆம் ஆண்டு டெஸ்ட் போட்டியில் அறிமுகமானார் பிராட். இங்கிலாந்து அணிக்காக இதுவரை 167 டெஸ்டுகளில் ஆடி 602 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். டெஸ்டில் அதிக விக்கெட் எடுத்த சாதனையாளர் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் உள்ளார். ஒரு இன்னிங்சில் ஐந்து முதல் அதற்கு மேல் விக்கெட் 20 முறை எடுத்துள்ளார். அத்துடன் ஒரு சதம், 13 அரை சதம் உள்பட 3,662 ரன்கள் சேர்த்துள்ளார்.

 

Exit mobile version