இந்த ஆண்டு நடைபெற்ற ஆஸ்கார் விருதானது இந்தியாவிற்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. அதற்கு ஆர்.ஆர்.ஆர் படத்தின் பாடலான “நாட்டு நாட்டு” பாடல் விருது வாங்கியிருந்ததே முதன்மைக் காரணம் என்று சிலர் சொன்னாலும், எலிபெண்ட் விஷ்பெரர்ஸ் ஆவணப்படத்திற்கு விருது கிடைத்ததுதான் குறிப்பிடத்தக்க ஒன்று ஆகும். முக்கியமாக யானைப் பராமரிப்பாளர்கள் பொம்மன் – பெள்ளி ஆகிய இருவர்களுக்கும் மிகப்பெரிய கவுரவம் கிடைத்திருந்தது. இது தமிழ்நாட்டிற்கான பெருமையாகவும் பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது எலிபெண்ட் விஷ்பெரர் ஆவணப் பட இயக்குநரின் மீது புகார் ஒன்றினை தெரிவித்துள்ளனர் பொம்மன் – பெள்ளி தம்பதிகள். என்ன குற்றச்சாட்டு என்பதை பின்வருமாறு காண்போம்.
நீலகிரி மாவட்டம், முதுமலை தெப்பக்காடு யானைகள் முகாமில், தாயைப் பிரிந்த இரு யானை குட்டிகளையும், அவற்றை பராமரித்து வந்த பழங்குடி பாகன் தம்பதி இடையிலான பாச உறவினை மையமாக வைத்து, இயக்குநர் கார்த்திகி எடுத்த, ‘த எலிபெண்ட் விஸ்பரர்ஸ் ஆவணப் படத்துக்கு சமீபத்தில் ஆஸ்கார் விருது கிட்டியது. இந்த ஆவணப்படத்தின் மூலம் யானைக் குட்டிகள் ரகு, பொமிமி மற்றும் பாகன் தம்பதி பொம்மன் – பெள்ளி ஆகியோரின் புகழ் உச்சத்தை தொட்டது. அப்படி உச்சத்தைத் தொட்டவர்களை படத்தின் இயக்குநர் எள்ளளவு கூட மதிக்கவில்லை என்று சொல்லப்படுகிறது. நேற்றைக்கு முன் தினம் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்மு அவர்கள் முதுமலைக்கு நேரில் வந்து தம்பதிகளைப் பாரட்டினார். இந்த நிலையில்தான், ”படத்தின் இயக்குநர் எங்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை” என்று பகிரங்க புகார் ஒன்றினை பாகன் தம்பதி சாட்டினார்கள்.
இயக்குநர் கார்த்திகி பாகன் தம்பதிக்கு வீடு கட்டித் தருவதாகவும், பண உதவி செய்து தருவதாகவும் கூறியிருந்திருக்கிறாராம். ஆனால் இதுவரை எந்த உதவியையும் இயக்குநர் இதுநாள் வரை செய்யவில்லை. இந்தக் கருத்தினை தம்பதிகள் இருவருமே கூறினர். மேலும் இயக்குநர் வெளிநாட்டில் இருப்பதால் அவரை தொடர்பு கொள்ள முடியவில்லையாம்.
காட்டின் பல்லுயிர்த் தன்மை நிலைத்து இருப்பதற்கு காரணம் யானைகள்தான். அப்படிப்பட்ட யானைகளின் வாழ்நிலை சூழலை படம் பிடிப்பது, யானைப் பாகன்களை வைத்து தங்களுக்கான காரணிகளை எடுத்துக்கொண்டு அவர்களை சக்கையாக விட்டெறியும் அதிகாரவர்க்கங்கள் எளிய மக்களின் கேள்விக்கு பதில் சொல்லியே ஆக வேண்டும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள்.