மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி நடத்த முடியும் என்று குற்ற உள்நோக்கத்துடன் புகார் கூறப்படுவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்து உள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற கருத்தரங்கில் கலந்து கொண்டு பேசிய அவர், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் சில நேரங்களில் கோளாறு ஏற்படும் என்று கூறினார். ஆனால் அதில் மோசடி செய்ய முடியாது என்று அவர் உறுதிபடத் தெரிவித்தார். வாக்குப்பதிவு இயந்திரங்களில் மோசடி செய்ய முடியும் என்று குற்ற உள்நோக்கத்துடன் புகார் கூறப்படுவதாக கண்டனம் தெரிவித்த சுனில் அரோரா, மிகவும் பாதுகாப்பான சூழலில் இந்த இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.
தேர்தலில் தோல்வி அடைந்த கட்சிகள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மீது குறை கூறுவது நியாயமற்றது என்று தெரிவித்த அவர், நடத்தை விதிமுறைகளை அமல்படுத்தியதில் தேர்தல் ஆணையம் மிகப்பெரிய சாதனை புரிந்து இருப்பதாக கூறினார். தேர்தலில் சமூக ஊடகங்களுக்கு முக்கியப் பங்கு இருப்பதாகவும் தலைமை தேர்தல் ஆணையம் குறிப்பிட்டார்.