மதுரையில் திட்டமிட்டபடி மக்களவை தேர்தல் நடைபெறும் என்று கூறியுள்ள சென்னை உயர்நீதிமன்றம், தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது
சித்திரை திருவிழா மற்றும் பெரிய வியாழனை சுட்டிக்காட்டி, மதுரை தொகுதி மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் மீது இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. அப்போது, தேர்தல் ஆணையம் சார்பில் ,சித்திரை திருவிழாவையொட்டி, மதுரையில் இரவு 8 மணிவரை வாக்குப்பதிவு நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. கிறிஸ்தவ பள்ளிகளில் அமைக்கப்படும் வாக்குப்பதிவு மையங்களில்,கிறிஸ்தவர்கள் வழிபாட்டுக்கு தடங்கலின்றி வந்துசெல்ல பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் பதிலளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் பதிலை ஏற்ற உயர்நீதிமன்றம், சித்திரை திருவிழா, பெரிய வியாழனை சுட்டிக்காட்டி மக்களவை தேர்தலை தள்ளிவைக்கக்கோரிய அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. மேலும், திட்டமிட்டபடி, வரும் 18ம் தேதி மதுரையில் மக்களவை தேர்தல் நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளது