தமிழகத்தில் அமைதியான முறையில் வாக்குப்பதிவினை நடத்தி முடிக்க தேவையான நடவடிக்கைகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
தமிழகத்தில் வேலூர் மக்களவை தொகுதி தவிர்த்து புதுச்சேரி உட்பட 39 மக்களவை தொகுதிகளில் பொதுத் தேர்தலும் தமிழகத்தில் 18 சட்டமன்ற தொகுதிகளில் இடைத்தேர்தலும் நாளை நடைபெறுகிறது. இதற்காக 65 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 8 ஆயிரத்து 293 வாக்குச்சாவடிகள் பதற்றம் நிறைந்தவையாக கண்டறியப்பட்டுள்ளன.
இதனிடையே தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளில் 822 வேட்பாளர்களும், 18 சட்டமன்ற தொகுதிகளில் 269 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். நாளை காலை 7 மணிக்கு துவங்கும் வாக்குபதிவு மாலை 6 மணி வரை நடைபெறும். சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மக்களவை தொகுதிக்கு மட்டும் இரவு 8 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இதனிடையே வாக்குப்பதிவின் போது எந்தவித அசம்பாவிதமும் நிகழாமல் மக்கள் அச்சமின்றி வாக்களிக்கும் வகையில் துணை ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.