ஒரே நேரத்தில் மக்களவை மற்றும் சட்டசபைகளுக்கு தேர்தல் நடத்த தேவையான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பற்றி, எழுத்து பூர்வமான தகவல்கள் இல்லை என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
மக்களவைக்கும், மாநில சட்டப்பேரவைகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தலை நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடி வலியுறுத்தி வருகிறார். இதன் மூலம் தேர்தல் செலவினங்கள் குறையும் என்றும், மத்திய அரசின் நலத் திட்டங்கள் அனைத்து மாநிலங்களுக்கும் சீராகச் சென்றடையும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக சட்ட ஆணையமும், தனது வரைவு அறிக்கையை அரசிடம் அளித்திருந்தது. ஆனால், அதற்கு பெரும்பாலான கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு எத்தனை மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களும், வாக்கு ஒப்புகை இயந்திரங்களும் தேவைப்படும் என விளக்கம் கேட்டு விஹார் துருவே என்ற சமூக ஆர்வலர் தகவல் உரிமைச் சட்டத்தின் கீழ் விண்ணப்பித்திருந்தார்.
அதற்கு பதிலளித்த தேர்தல் ஆணையம், அதுதொடர்பான விவரங்கள் எதுவும் தங்களிடம் இல்லை எனத் தெரிவித்துள்ளது. 20 லட்சம் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மட்டுமே உள்ளதாகவும், ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் கூடுதலாக 10 லட்சம் இயந்திரங்கள் கொள்முதல் செய்ய
4 ஆயிரத்து 500 கோடி ரூபாய் தேவைப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஒரே நேரத்தில் தேர்தலை நடத்த மத்திய அரசு தீவிரமான முயற்சி எடுத்து வரும் நிலையில், அதுதொடர்பான அடிப்படை விவரங்கள் கூட தேர்தல் ஆணையத்திடம் இல்லாதது புதிய சர்ச்சைகளுக்கு வழி வகுத்துள்ளது.