மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்தின் போது ஏற்பட்ட கலவரம் காரணமாக, ஒரு நாள் முன்னதாக, நேற்றோடு தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில் உள்ள ஒன்பது மக்களவை தொகுதிகளுக்கு நாளை மறுநாள் தேர்தல் நடைபெறுகிறது. இந்நிலையில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்ட பேரணியில் திரிணாமுல் காங்கிரஸ் மற்றும் பாஜக தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. இதனை தடுக்க அம்மாநில காவல்துறையினர் தவறிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, அங்கு சட்டப்பிரிவு 324 அமல்படுத்தப்பட்டது. இந்த விதி அமலுக்கு வந்த பின் குறிப்பிட்ட காலத்திற்குள் தேர்தல் பிரசாரம் நிறுத்தப்பட வேண்டும். அதன்படி நேற்று இரவு 10 மணிக்கு மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரச்சாரம் நிறுத்தப்பட்டது.
முன்னதாக தம்தம் பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர், மேற்கு வங்கத்தை தனது சொந்த சொத்து என்று மம்தா தவறாக கருதுகிறார் என்றும் தற்போது தேர்தல் ஆணையம் மற்றும் தேர்தல் முறையையே தவறாக பேசுவதாகவும் குறிப்பிட்டார்.
இடதுசாரிகள் ஆட்சியின்போது மம்தாவுக்கு நெருக்கடி தரப்பட்டது என்று குறிப்பிட்ட மோடி, தான் முதலமைச்சர் ஆவதற்கு மத்திய பாதுகாப்பு படையினரும் ஒரு காரணம் என்பதை மறந்துவிட்டு தற்போது அவர்களை வெளியேற வேண்டும் என்று மம்தா பானர்ஜி கூறிவருவதாகவும் விமர்சித்தார்.