முகத்தை காட்ட விரும்பாத சிலர் பின்னால் இருந்து மனுதாரரை இயக்குவதால், அதிமுகவில் நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் நிராகரிக்குமாறு, இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
உட்கட்சி தேர்தலை நடத்தாமல் அதிமுக நிர்வாகிகளை நியமனம் செய்வதற்கு தடை விதிக்க கோரி, சூர்யமூர்த்தி என்பவர் சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன், ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு சென்னை நகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதி தாமோதரன் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சூரியமூர்த்தியின் மனுவை நிராகரிக்க கோரி அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சார்பில் மனுதாக்கல் செய்யபட்டது. அதில், சூரியமூர்த்தி அதிமுக உறுப்பினரே இல்லை என்பதால், வழக்கு தொடர அவருக்கு எந்த அடிப்படை உரிமையும் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
சிலரின் தனிபட்ட நலனுக்காக கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தோடு வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், முகத்தை காட்ட விரும்பாத சிலர், பின்னால் இருந்து மனுதாரரை இயக்குவதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக முகங்களாக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளரை தேர்தல் ஆணையம் ஏற்றுக் கொண்டதோடு, இரட்டை இலை சின்னத்தையும் பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் நியமனத்தை கேள்வி கேட்க முடியாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மனுதாரர் ஒரே கோரிக்கைக்கு பல நீதிமன்றங்களில் வழக்கு தொடர்வதை வாடிக்கையாக வைத்துள்ளதாகவும், நிர்வாகிகள் நியமனத்திற்கு தடை கோரிய வழக்கை அபராதத்துடன் நிராகரிக்குமாறும் கோரப்பட்டுள்ளது. இதையடுத்து வழக்கு விசாரணையை ஆகஸ்ட் 10ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.