”திமுக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை”

காவல்துறையை, திமுகவின் ஏவல் துறையாக மாற்றி, ஆளுங்கட்சியினர் ஜனநாயக படுகொலையை நிகழ்த்துவதை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாக கண்டித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தருமபுரி மாவட்டம் மொரப்பூர் ஒன்றியத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திமுகவினர் புகுந்து அராஜகத்தில் ஈடுபட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்றும்,தாக்குதல் நடத்திய ஆளும் கட்சியினரைத் தடுக்காமல், அங்கிருந்த காவல்துறை கைகளைக் கட்டியபடி வேடிக்கை பார்த்தது ஜனநாயகப் படுகொலை என்றும் விமர்சித்துள்ளார்.

தனக்குக் கீழுள்ள காவல்துறையை, திமுக-வினரின் ஏவல் துறையாக மாற்றி, எதிர்க்கட்சியினர் மீது, ஆளும் கட்சியினர் நடத்தும் தாக்குதலையும், ஜனநாயகப் படுகொலையையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வன்மையாகக் கண்டித்துள்ளார்.

கோவையில் திமுகவினரால் தாக்குதலுக்குள்ளான சட்டமன்ற உறுப்பினர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் பொதுமக்கள் மீதே காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளது விந்தையாக இருப்பதாகவும்,இதனை பார்க்கும்போது, தமிழக காவல்துறை திமுக அரசின் கைப்பாவையாக செயல்பட்டு வருவது வெட்ட வெளிச்சமாகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் எதிர்க்கட்சிகள், சமூக செயல்பாட்டாளர்கள் ஆகியோர் ஜனநாயக முறையில் பொதுக்கூட்டம் நடத்துவதையும், கருத்துக்கள் வெளிப்படுத்துவதையும், காவல்துறையினரை வைத்தும், தனது கட்சியினரை வைத்தும் தடுக்க நினைக்கும் போக்கை திமுக கைவிட வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version