பூதக்கண்ணாடி வைத்து தேடிப்பார்த்தால் கூட, ஸ்டாலினால் அதிமுக அரசு மீது குறை சொல்லவே முடியாது என முதலமைச்சர் கூறியுள்ளார்.
சோழிங்கநல்லூர் தொகுதி அதிமுக வேட்பாளர் K.P.கந்தனை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய முதலமைச்சர், அதிமுகவின் வலிமை தெரியாமல், ஸ்டாலின் போகிற பக்கமெல்லாம் இந்தத் தேர்தலோடு அதிமுக காணாமல் போய்விடும் என பேசிவருகிறார் என்றார். இந்தத் தேர்தலோடு காணாமல் போகப்போவது திமுகதான் என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.
அதனைத்தொடர்ந்து தாம்பரம் தொகுதி அதிமுக வேட்பாளர் T.K.M. சின்னையாவை ஆதரித்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், ரத்து செய்யப்பட்ட டெண்டரில் ஊழல் நடந்திருப்பதாக ஆளுநரிடம் தன் மீது புகார் கொடுத்தவர் ஸ்டாலின் என்றார். படித்துப் பார்த்துவிட்டு புகார் கொடுக்க வேண்டும் என்றுகூட தெரியாத ஸ்டாலின், சட்டமன்ற எதிர்க்கட்சித்தலைவராகவும், ஒரு கட்சியின் தலைவராகவும் இருப்பதாக விமர்சித்தார்.
பூதக்கண்ணாடி வைத்து தேடிப்பார்த்தால் கூட அதிமுக அரசின் மீது ஒரு குற்றச்சாட்டையும் வைக்க முடியாது எனக்கூறிய முதலமைச்சர், திறமையில்லாத தலைவராக ஸ்டாலின் இருப்பதாக விமர்சித்தார். உண்மையை பேசி பிரசாரம் செய்தால், ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சி தலைவராக அமரும் வாய்ப்பையாவது மக்கள் அளிப்பார்கள், இல்லையென்றால் அதுவும் கிடைக்காது என்றும் முதலமைச்சர் கூறினார்.
பின்னர், பல்லாவரம் தொகுதி அதிமுக வேட்பார் சிட்லபாக்கம் ராசேந்திரனை ஆதரித்து கீழ்க்கட்டளை பகுதியில் முதலமைச்சர் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்காலத்தில் எப்போதுமே பெண்களுக்கு பாதுகாப்பு இருந்ததில்லை என குற்றம்சாட்டினார். 1989ஆம் ஆண்டு சட்டமன்றத்தில் வைத்து மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதாவை தாக்கியவர்கள் திமுகவினர் என முதலமைச்சர் குறிப்பிட்டார்.
இப்போது ஸ்டாலின் பல்வேறு சூழ்ச்சிகளை செய்து ஆட்சிக்கு வரத் துடிக்கிறார், அவரது கனவு ஒருபோதும் நிறைவேறாது என முதலமைச்சர் கூறினார்.
Discussion about this post