தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளையொட்டி, சேலத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
தந்தை பெரியாரின் 145வது பிறந்தநாளை கொண்டாடும் விதமாக, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு, கழக பொதுச் செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் கழக அமைப்பு செயலாளர் செம்மலை, மாநகர் மாவட்ட கழக செயலாளர் வெங்கடாசலம், புறநகர் மாவட்ட கழக செயலாளர் இளங்கோவன், மாநகர அவைத் தலைவர் பன்னீர்செல்வம் உட்பட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக பெரியார் சிலைக்கு மரியாதை செலுத்துவதற்காக வந்த பொதுச்செயலாளருக்கு, கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
மேலும் தந்தை பெரியாரின் பிறந்தநாளையொட்டி ட்விட்டரில் எதிர்த்கட்சித் தலைவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில், சமூக ஏற்றத்தாழ்வுகளை களையவும், பெண் அடிமைத்தனத்தை ஒழிக்கவும், சாதிய பாகுபாடுகளை அழிக்க போராடியவர் என புகழாரம் சூட்டியுள்ளார். மூடநம்பிக்கைக்கு எதிராகவும், பெண் கல்வியை முன்னெடுத்தும் போராடிய புரட்சியாளர் பெரியார் என்றும், அவர்தம் புகழையும் சுயமரியாதை கொள்கைகளையும் போற்றி வணங்குகிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.