சிறுபான்மையினரை வஞ்சிக்கும் விடியா அரசு – எதிர்கட்சித் தலைவர் கண்டனம்!

கழகப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான திரு.எடப்பாடி கே.பழனிசாமி அவர்களின் அறிக்கை :

’ சிறுபான்மையினர் நலன் காப்போம்’ என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் விடியா திமுக அரசின் முதலமைச்சருடைய உண்மை முகம்!

“ஏய்ச்சி பிழைக்கும் தொழிலே சரிதானா? எண்ணிப்பாருங்க”

என்ற புரட்சித் தலைவர் அவர்களுடைய பாடலுக்கேற்ப, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி வரும் இந்த விடியா திமுக அரசு, அவர்களை நம்பி வாக்களித்த அப்பாவி மக்களுக்கு மட்டுமல்ல, சிறுபான்மை மக்களுக்கும் பட்டை நாமம் போட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்தவுடன், நீண்ட நாள் சிறையில் இருக்கும் இஸ்லாமிய கைதிகளை விடுதலை செய்வோம் என்று சட்டமன்றத் தேர்தலின்போது மேடைகளில் முழங்கினார்கள் பொம்மை முதலமைச்சரும், இதர திமுக-வினரும். ஆட்சிக்கு வ்ந்து 26 மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலும், இதுவரை இதற்கு ஒரு தீர்வும் காணப்படவில்லை.

கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசேலம் புனித யாத்திரை மேற்கொள்ள நிதியுதவி வழங்கும் திட்டத்தை புரட்சித் தலைவி அம்மா அவர்கள் கொண்டுவந்தார்கள். அதன்படி ஆண்டுதோறும் ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் பயணிகளின் எண்ணிக்கை 500 ஆக இருந்ததை, 2019 ஆம் ஆண்டு, எனது தலைமையிலான அம்மாவின் அரசு 600 ஆக உயர்த்தியது. இதில், கன்னியாஸ்திரிகள்/ அருட்சகோதரிகளுக்கு 50 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2019-ஆம் ஆண்டுவரை இத்திட்டத்தின் கீழ் 4,128 கிறிஸ்தவர்கள், 8.25 கோடி ரூபாய் செலவில் இப்புனிதப் பயணம் மேற்கொண்டுள்ளனர். 2020 ஆம் ஆண்டு கொரோனா நோய்  பெருந்தொற்று காலத்தில் புனிதப் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

வாய்ப் பந்தல் போட்டே மக்களை ஏய்க்கும் இந்த விடியா தி.மு.க அரசு, ஆட்சிப் பொறுப்பேற்று 26 மாதங்கள் முடிவடைந்துவிட்ட நிலையிலும், ஜெருசலேம் புனிதப் பயணம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கு இதுவரை நிதியுதவி வழங்கப்படவே இல்லை.

மாண்புமிகு புரட்சித் தலைவி அம்மா அவர்களும், அம்மாவின் அரசும் கொண்டுவந்த பல்வேறு மக்கள் நலத் திட்டங்களுக்கு மூடுவிழா கண்ட இந்த விடியா திமுக அரசு, சிறுபான்மையின மக்களுக்காக மாண்புமிகு அம்மா அவர்களே துவக்கி வைத்த ஜெருசலேம் புனிதப் பயணத்திற்கான நிதியுதவியையும் காழ்ப்புணர்ச்சி காரணமாக நிறுத்தியுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே, விடியா திமுக அரசு விழிப்புணர்வு பெற்று, கிறிஸ்தவப் பெருமக்கள் ஜெருசலேம் யாத்திரை செல்ல உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன்.

தங்களை கேள்வி கேட்க யார் இருக்கிறார்கள் என்ற நினைப்பில் மக்கள் விரோத ஆட்சியை நடத்தும் இந்த பொம்மை முதலமைச்சருக்கு, அவரால் ஏமாற்றப்பட்ட சிறுபான்மை மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள் என்று எச்சரிக்கிறேன்.

இவ்வாறு தன்னுடைய கண்டன அறிக்கையில் பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

Exit mobile version