ஸ்டாலினுக்கு தில், திராணி இருந்தால் நீதிமன்றத்தில் நேர்மையாக வாதாடவும் – எதிர்க்கட்சித் தலைவர் மாஸ் பதிலடி!

நேற்றைய தினம் செந்தில்பாலாஜி அவர்களை கைது செய்ததைத் தொடர்ந்து ஸ்டாலின் பல கருத்துக்கள் தெரிவித்திருந்தார். அதிமுக பற்றியும் என்னைப் பற்றியும் கருத்து சொல்லியிருந்தார்.

செந்தில்பாலாஜியின் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை என்பது உச்சநீதிமன்றம் ஒப்புதல் பெற்று நடைபெற்று வந்தது. அவர் வழக்கு குறித்து அமலாக்கத்துறை விசாரிக்கலாம் என்றும், இரண்டு மாத காலங்களில் இந்த விசாரனையை முடிக்க வேண்டும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அதோடு அந்த வழக்கை இரண்டு மாதங்களில் முடிக்காவிட்டால் உச்சநீதிமன்றமே சிறப்புக்குழு ஒன்று அமைத்து வழக்கு விசாரிக்கப்படும் என்று தீர்ப்பு சொல்லியிருந்தது. அதன் அடிப்படையில் தான் செந்தில்பாலாஜியின் வீடுகள், தலைமைச் செயலக அறையில் சோதனை நடைபெற்றது. செந்தில் பாலாஜியும் விசாரணைக்குள்ளானார். காலையில் நடைபயிற்சி மேற்கொண்டுவிட்டு பத்திரிகையாளருக்கு பேட்டி அளித்த செந்தில்பாலாஜி, “நான் அமலாக்கத்துறைக்கு முழு ஒத்துழைப்புத் தருகிறேன் என்று தெரிவித்தார்”. ஆனால் அதிகாரிகள் செந்தில்பாலாஜி சரியாக ஒத்துழைப்புத் தரவில்லை என்று கருத்து தெரிவித்தனர்.

ஏற்கனவே இந்த வழக்குக் குறித்து சம்மன் அனுப்பியும் அதற்கு செந்தில்பாலாஜி, உரிய முறையில் அமலாக்கத்துறையினரிடம் ஆஜராகவில்லை. இருப்பினும் அமலாக்கத்துறை குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரணையை நடத்துமுடிக்க வேண்டுமென்று விசாரித்து சோதனை செய்து அவரை கைது செய்து இருக்கிறார்கள். அவருக்கு உடல்நிலை சரியில்லை என்று தெரிந்தவுடன், ஓமந்தூரார் மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அதனையொட்டி முதல்வர் ஸ்டாலின் அவர்கள் செந்தில்பாலாஜிக்கு பரிந்து பேசி வருகிறார். சமூக வலைதளங்களில் பதற்றத்துடன் பேசிவந்த காட்சியை நான் பார்த்தான். இந்த பதற்றத்திற்கு என்ன காரணம்? அதிமுக ஆட்சிக்கு பிறகு ஆட்சிமாற்றம் ஏற்பட்டு திமுக ஆட்சி வந்தது. எதற்காக இந்த ஆட்சியை உங்களுக்கு கொடுத்தார்கள். நாட்டு மக்களுக்கு நன்மை செய்வீர்கள் என்றுதானே. ஆனால் மக்களைப் பற்றி சிந்திக்கவில்லை. ஒன்றுமே செய்யவில்லை. ஏனென்றால் ஸ்டாலினுக்கு ஒன்றுமே தெரியாது. அவர் பொம்மை முதலமைச்சர். எல்லாவகையிலும் பணம். அது மட்டும்தான் குறிக்கோள். அதனால்தான் அவருடைய அமைச்சரவையில் உள்ள அமைச்சரான பழனிவேல் தியாகராஜன் அவர்கள் ஆடியோ மூலமாக 30 ஆயிரம் கோடி உதயநிதியும் சபரீசனும் ஊழல் செய்ததாக குறிப்பிட்டிருந்தார். இந்த செய்திகள் பத்திரிகைகளிலும் சமூக வலைதளங்களிலும் பேசுபொருளானது.

அப்படி இருக்கும்போது செந்தில்பாலாஜி கைது செய்யப்பட்டவுடன், அமலாக்கத்துறையினரிடம் உண்மையை சொல்லிவிடுவார் என பயந்து ஓடிப் போய் ஓமந்தூரார் மருத்துவமனையில் ஸ்டாலினும், அவரது அமைச்சர்களும் பார்க்கின்றனர். தான் திமுக குடும்பத்திற்கு கொடுத்த பணத்தை அமலாக்கத்துறையினரிடம் சொல்லிவிடுவாரோ என்ற அச்சத்தில் முதல்வரும் அமைச்சர்களும் பார்த்து உள்ளார்கள். சமீபத்தில் அவர் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் வீட்டில் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றபோது ஸ்டாலின் சென்று பார்க்கவில்லை. மேலும் 2ஜி வழக்கில் ராசாவும், கனிமொழியும் கைதாகி திஹாரில் இருந்தபோது கனிமொழியைக் கூட சென்று ஸ்டாலின் பார்க்கவில்லை. ஆனால் செந்தில்பாலாஜியை சென்று பார்த்து இருக்கிறார். இவ்வளவு பதற்றம் எதற்காக? வழியிலே பயம் இருக்கிறது, மடியிலே கணம் இருக்கிறது.

தமிழகத்திலேயே டாஸ்மாக்குகள் சுமார் 6000 கடைகள் இருக்கிறது. 5600 கடைகளுக்கு பார்கள் இருக்கிறது. அதில் 3000 பார்களுக்கு முறையான டெண்டர் இல்லை. சேலத்தில் மட்டும் 27, வேலூரில் 72 பார்கள் சீல் வைக்கப்பட்டது. இதெல்லாம் காவல்துறைக்கு முன்பே தெரியாதா? காவல்துறை திமுகவின் ஏவல்துறையாக செயல்படுகிறது. திராவிட ஆட்சி, திராவிட மாடல் தான் தமிழகத்தில் சிறந்த ஆட்சி என்று மார்தட்டும் ஸ்டாலின் மக்களுக்கான எந்த நலத்திட்டங்களையும் சட்டங்களையும் இயற்றவில்லை. மேலும் என்னை நேற்றைய காணொளியில் விமர்சித்திருந்தார் ஸ்டாலின். எதிர்க்கட்சித் தலைவர் ஒருவர்மீது குற்றம் செலுத்த வேண்டுமென்றால், அக்குற்றத்தைப் பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு பேசவேண்டும். யாரோ எழுதியதை வைத்து பேசுகிறார் ஸ்டாலின். என்மீது குற்றம் சுமத்திய ஆர்.எஸ்.பாரதியே வழக்கை திரும்ப பெற்றார். ஆனால் நான் இந்த வழக்கை நடத்துகிறேன் என்றுதான் சொன்னேன். எனக்கு வழியில் பயம் இல்லை, மடியில் கணம் இல்லை.

Exit mobile version