யெஸ் வங்கியில் 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் பெற்ற விவகாரம் தொடர்பாக, ரிலையன்ஸ் நிறுவன அதிபர் அனில் அம்பானிக்கு வரும் 19 ஆம் தேதி ஆஜராக அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
டி.எச்.எஃப்.எல், அனில் அம்பானி குழு, வோடபோன் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு விதிகளை மீறி யெஸ் வங்கி பல்லாயிரம் கோடி ரூபாய் கடன் அளித்துள்ளதாக அமலாக்கத்துறை புகார் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக அந்நிய செலாவணி மோசடி உள்ளிட்ட வழக்குகளில் ரானா கபூர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் யெஸ் வங்கியில் அனில் அம்பானி நிறுவனம் 12 ஆயிரத்து 800 கோடி ரூபாய் கடன் பெற்றது தெரியவந்தது. இந்த கடனை அடைக்க முடியாமல் போனதால் அனில் அம்பானி நிறுவனம் பெற்ற தொகை வாராக் கடன் பட்டியலில் சேர்க்கப்பட்டது. இது தொடர்பாக விசாரணை நடத்த அனில் அம்பானிக்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பினர்.
ஆனால், உடல்நிலையை காரணம் காட்டி வேறு தேதியில் ஆஜராக அனில் அம்பானி அனுமதி கேட்டார். இதனால் வரும் 19 ஆம் தேதி காலை 11 மணிக்கு நேரில் ஆஜராக, அவருக்கு சம்மன் அனுப்பபட்டுள்ளது.