ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டம் செப். மாதம் முதல் துவங்கப்படும்: முகேஷ் அம்பானி

ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இன்டர்நெட் என அனைத்து வசதிகளையும் பெறும், ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தை செப்டம்பர் மாதம் முதல் துவங்க உள்ளதாக, ரிலையன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நேற்று மும்பையில் நடைபெற்ற ரிலையன்ஸ் நிறுவனத்தின் ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேசிய முகேஷ் அம்பானி, உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் நெட்வொர்க் என்ற பெருமையை ஜியோ பெற்றுள்ளது என்றும், தற்போது வரை 340 மில்லியன் சந்தாதாரர்களை பெற்று ஜியோ சாதனை படைத்துள்ளது என்றும் கூறினார்.

இதேபோன்று எண்ணெய் வர்த்தக துறையில் சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனத்துடன் 5 லட்சம் கோடிக்கும் அதிக மதிப்பிலான ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று தெரிவித்த அவர், செப்டம்பர் 5 ஆம் தேதி முதல் துவங்க உள்ள ஜியோ ஜிகா ஃபைபர் பிராட்பேண்ட் திட்டத்தின் சிறப்பம்சங்களை எடுத்துரைத்தார். அதன்படி, மாதம் 700 ரூபாய் முதல் 10 ஆயிரம் வரை சந்தா தொகை கொண்ட இந்த புதிய திட்டத்தின் படி, ஒரே இணைப்பில் மொபைல், டிவி, இன்டர்நெட் என அனைத்து வசதிகளையும் பெற முடியும்.

டிவி மூலமாகவே உலகின் எந்த மூலையில் இருப்பவர்களிடமும் வீடியோ கால் பேசலாம். ஜியோ செட்டாப் பாக்ஸ் மூலம் இந்தியாவின் முதல் மல்டிபிளேயர் ஆன்லைன் நெட்வொர்க் அறிமுகம் செய்யப்படுகிறது. ஆயுட்கால சந்தாதாரராக இணைபவர்களுக்க 4K TV மற்றும் செட் டாப் பாக்ஸ் இலவசமாக வழங்கப்படுகிறது.

Exit mobile version