மீண்டும் ராபர்ட் வதேராவை கைது செய்து விசாரிக்க அனுமதிக்க வேண்டும்: அமலாக்கத்துறை

விசாரணைக்கு ஒத்துழைக்காத ராபர்ட் வதேரா, கைது செய்து விசாரிக்க அனுமதிக்குமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.

லண்டனில் சொத்து வாங்கியதில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றதாக கூறப்படும் வழக்கில் பிரியங்கா காந்தியின் கணவர் ராபர்ட் வதேரா மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பான வழக்கு விசாரணை டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் நடைபெற்றுவருகிறது.

கடந்த 19-ம் தேதி வழக்கு விசாரணைக்கு வந்தபோது, விசாரணைக்கு முறையாக ஒத்துழைக்கவில்லை என்று கூறி, அவரை காவலில் எடுத்து விசாரிக்க அமலாக்கத் துறை சார்பில் அனுமதி கோரப்பட்டது. இது தொடர்பான வழக்கை நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கில் மீண்டும் ராபர்ட் வதேராவை விசாரிக்க அனுமதிக்குமாறு டெல்லி பாட்டியாலா நீதிமன்றத்தில் மத்திய அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது. மேலும், வழக்கு தொடர்பான முக்கிய சாட்சியங்களை ராபர்ட் வதேரா கலைக்க நேரிடும் என்பதால், அவரை சிறைபிடிக்க அனுமதிக்கவேண்டும் என்றும் முறைகேடாக சொத்துக்களை வாங்கியுள்ளது தொடர்பான ஆவணங்கள் தங்களிடம் உள்ளதாகவும் அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் முறையீட்டுள்ளது.

Exit mobile version