தமிழகத்தில் புதிய புதிய ஆலைகள் வந்தால் மட்டுமே பொருளாதாரம் முன்னேறும் என சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் நூற்பாலையில் இருந்து வெளியேறும் கழிவுகளால், அப்பகுதியில் சுகாதார சீர்கேடுகள் ஏற்படுவதாக சட்டப்பேரவையில் பேசிய காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்து பேசிய தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, ஆலையை மூடவேண்டும் என்ற நோக்கத்திலேயே உறுப்பினர் பேசுவதாகவும், பல ஆண்டுகளாக இயங்கிவரும் ஆலையில் அவ்வப்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்தார். ஆலைகளில் ஏற்பட்டுள்ள பிரச்சினைகளை கூறினால் அதை தீர்க்க நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கும் என்றும் முதலமைச்சர் கூறினார்.
முன்னதாக, ஸ்டெர்லைட் ஆலை குறித்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்விக்கு பதிலளித்து பேசிய முதலமைச்சர், ஸ்டெர்லைட் ஆலை தமிழகத்திற்கு வருவதற்கும், அதை விரிவுபடுத்தியதற்கும் தி.மு.க. தான் காரணம் என்று கூறினார். மேலும், ஸ்டெர்லைட் ஆலையை மூடவேண்டும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாகவும், அவர் தெரிவித்தார்.