200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் வந்த கிழக்கு ஆப்பிரிக்க நத்தை! தற்போது மீண்டும் கோவையில்!

கோவையில் கொத்துக்கொத்தாக காணப்படும் ஆப்பிரிக்க நத்தைகளால் விளைநிலங்களில் ஏற்படும் பாதிப்புகள் விவசாயிகளுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. 200 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவுக்குள் வந்த கிழக்கு ஆப்பிரிக்க நத்தை ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறியது எப்படி? இந்த செய்தித்தொகுப்பில் பார்க்கலாம்..

அகாடினா பியூலிகா என்னும் உயிரியல் பெயரைக் கொண்ட கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகளால் தற்போது, கோவை மாவட்டம், காரமடை, வெள்ளியங்காடு, தோலம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் அரண்டு போய் உள்ளனர். 200 ஆண்டுகளுக்கு முன்பு இங்கிலாந்தை சேர்ந்த வில்லியம் ஹென்ரி பென்சன் எனும் நத்தையின ஆய்வாளரால், மொரீஷியஸில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்ட கிழக்கு ஆப்பிரிக்க நத்தை ஆக்கிரமிப்பு உயிரினமாக மாறி, பயிர்களையும் பல்வேறு வகையான தாவரங்களையும் சிதைத்துக் வருகிறது. இதனால் அந்தத் தாவரங்களைச் சார்ந்திருக்கும் மற்ற உயிரினங்களும் பாதிக்கப்பட்டுள்ளன.
முள்ளங்கி, வாழை, குடை மிளகாய், தக்காளி போன்ற பல்வேறு பயிர் வகைகள் மற்றும் நிலப்பகுதியிலுள்ள பழங்கள், பூக்கள் உட்பட 60 வகையான தாவரங்களையும் இந்த நத்தையினம் உணவாக்கி கொள்கிறது. அதுமட்டுமல்லாமல் சுண்ணாம்புச் சத்துக்காக, கான்கிரீட்டில் உள்ள சில பகுதிகளையும் உண்டு செரிக்கும் திறன் கொண்டவை இவை. அதோடு இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு ஒருமுறை இனப்பெருக்கம் செய்யும் இந்த நத்தைகள் ஓராண்டுக்கு 1,200 முட்டைகள் வரை இடுகின்றன. அவற்றில் 1000 குஞ்சுகளாகின்றன. உலக அளவில் மிகவும் ஆபத்தான, மோசமான ஆக்கிரமிப்பு உயிரினங்களின் பட்டியலில் இந்தக் கிழக்கு ஆப்பிரிக்க நத்தை இரண்டாவது இடத்தில் உள்ளது.

தற்போது கோவை மாவட்டத்தில் இந்த நத்தைகளால் கடும் பொருளாதார இழப்புகளை விவசாயிகள் சந்தித்து வருவதாக ஆதங்கம் தெரிவித்துள்ளனர். அதற்கான தீர்வு குறித்து அரசின் வேளாந்துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது.

ஓர் உயிரினம், ஆக்கிரமிப்பு உயிரினமாக உருவெடுக்கும் ஆரம்பக்கட்டத்திலேயே நிலைமையை உணர்ந்து அதன் பரவலைக் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும். இல்லையேன்றால், பிரச்னை எந்த அளவிற்கு பாதிப்பு ஏற்படும் என்பது கிழக்கு ஆப்பிரிக்க நத்தைகள் ஓர் உதாரணம்.

– பாலாஜி, செய்தியாளர்

Exit mobile version