கொசஸ்தலை ஆற்றில் தடுப்பணை கட்டியதில் முறைகேடு நடந்துள்ளதாக எதிர்கட்சி துணை தலைவர் துரைமுருகன் கூறியிருப்பது பொய் என்று அமைச்சர் ஜெயக்குமார் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
கிருஷ்ணா நீரை தேக்கி வைக்க தனியார் நிலம் கையகப்படுத்தாததால், நீர்தேக்கம் அமையாமல் 186 கோடி ரூபாய் பாழானது என்று எதிர்கட்சி தலைவர் துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் ஜெயக்குமார்,புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு புகாரை உயர் நீதிமன்றம் விசாரிக்கும் நிலையில், வழக்கை திசை திருப்பும் வகையில், துரைமுருகன் பொய்யான அறிக்கையை வெளியிட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
1966-ம் ஆண்டு கொசஸ்தலை ஆற்றில் 92,260 கன அடி வெள்ளநீர் சென்றது என்பது தவறானது என்றும், 59,760 கன அடி வெள்ளநீர் சென்றதாகவும் அமைச்சர் ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ளார்.
2015-ம் ஆண்டில் பெய்த வரலாறு காணாத மழையால், விநாடிக்கு 83,000 கனஅடி வெள்ளநீர் சென்றதாலும், 100 ஆண்டுக்கு ஒருமுறை ஏற்பட்ட இயற்கை சீற்றத்தின் காரணமாகவும் இந்த தடுப்பணை சேதமடைந்தது என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெள்ளத்தில் சேதமடைந்த இந்த தடுப்பணையை சரி செய்ய 9 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டதாக துரைமுருகன் கூறியுள்ளது தவறானது என்று அவர் விளக்கியுள்ளார். இந்த தடுப்பணையை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர 18 கோடியே 17 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மறு வடிவமைப்பு செய்யப்பட்டதாக அவர் கூறியுள்ளார்.
திமுக ஆட்சியின்போது, சுற்றுச்சூழல் தடை நீக்க சான்று பெறாமல், அவசர கதியில் தொடங்கிய தாமிரபரணி, கருமேனியாறு, நம்பியாறு இணைப்பு திட்டத்தை, அதிமுக ஆட்சி முழுவீச்சில் செய்து வருகிறது.நிலைமை இவ்வாறு இருக்க, தி.மு.க. ஆட்சியின் தவறுகளை மறைக்க, முற்றிலும் உண்மைக்குப் புறம்பான அறிக்கையை துரைமுருகன் வெளியிட்டிருப்பது வேடிக்கையாகவும், வியப்பாகவும் இருப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.
Discussion about this post