இந்திய அணியைத் தடுமாற செய்த இளம் சுழல்! யார் இந்த துனித் வெல்லாலகே?

ஆசியக்கோப்பையின் சூப்பர் 4 சுற்றானது தீவிரம் அடைந்துள்ள நிலையில், இந்திய அணியும் இலங்கை அணியும் நேற்று மோதின. முன் தினம் பாகிஸ்தானை பந்தாடிய இந்திய அணி ஓய்வே இல்லாமல், வெற்றி உற்சாகத்துடன் இலங்கையை எதிர்கொண்டது. ஒரு பெரிய ஸ்கோரினை இந்திய அணி எட்டிப் பிடிக்கும் என்று நினைக்கையில் 213 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி அளித்தது. இதற்கெல்லாம் ஒரே காரணம் இலங்கையின் இளம் சுழல் துனித் வெல்லாலகே தான்.

யார் இந்த வெல்லாலகே?

இருபது வயதே நிறைந்த துனித் வெல்லாலகே இலங்கை அணியில் ஒரு புதுமுகம். ஒரு டெஸ்ட் போட்டி மற்றும் 13 ஒரு நாள் கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணிக்காக விளையாடி இருக்கிறார். இவர் 19 வயதிற்கு உட்பட்டவருக்கான உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை வழிநடத்தியுள்ளார். அத்தொடரின் முதலிரண்டு போட்டிகளிலும் ஐந்து விக்கெட்டுகள் எடுத்து, ஆட்ட நாயகன் விருதும் பெற்றுள்ளார். சவுத் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக சதம் அடித்து வெற்றி பெறவும் செய்துள்ளார். 19 வயதுக்கு உட்பட்டவருக்கான உலகக்கோப்பை தொடரில் சதம் அடித்த இலங்கையின் முதல் கேப்டன் வெல்லாலகே தான்.

இலங்கையின் எதிர்கால தூண்

தற்போது இந்திய அணிக்கு எதிராக இலங்கை அணி தோல்வி அடைந்திருந்தாலும், பயத்த காமிச்சாட்டான் பரமா” என்பது போல, ஐந்து முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தியிருக்கிறார் இந்த இளம் சுழல். ரோகித் சர்மா, சுப்மன் கில், விராத் கோலி, கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா என்று இந்திய அணியின் பேட்டிங் லைன் அப்பையே காலி செய்துவிட்டார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான இவரை அஜந்தா மெண்டிசின் நிழலாக கருதுகிறார்கள். முத்தையா முரளிதரன், அஜந்தா மெண்டிஸ், அகிலா தனஞ்செயா-விற்கு பிறகு இலங்கையின் தூணாகவும் எதிர்காலமாகவும் வெல்லாலகே இருப்பார் என்பதில் எந்த வித மாற்றுக் கருத்தும் இல்லை.

Exit mobile version