நோயை குணப்படுத்த மாந்திரீகம் செய்வதாக கூறி, 12 லட்சம் மோசடி செய்த போலி சாமியாரை, காவல் துறையினர் கைது செய்தனர்….
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியில் உள்ள வேப்பஞ்சாலை தெருவில் கடந்த 15 வருடமாக வசித்து வருபவர் டேனியல் சித்தர். இவருக்கு வயது 58. இவரின் சொந்த ஊர் திருநெல்வேலி. இவர் மாந்திரீகம் செய்வது,பில்லி சூனியம் வைப்பது,வசியம் செய்வது போன்ற செயலில் ஈடுபட்டு வந்துள்ளார்.இந்த நிலையில் விழுப்புரம் அருகே உள்ள ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்த ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அலுவலர் முருகையன் என்பவரது 2 வது மகள் கற்பகதிற்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் டேனியல் சித்தரை சந்தித்து மகளுக்கு உள்ள குறைகளைக் கூறி உள்ளார்.
உங்கள் மகளின் உடல் நிலையை நான் சரி செய்து தருகிறேன் ஆனால் அதற்கு அதிக பணம் செலவாகும் என கூறி பூஜைகள் செய்வதற்கு சாமான்கள் வாங்க வேண்டும் என்று அடிக்கடி பட்டியல் கொடுத்து முருகையனிடம் பணம் பறித்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் முருகையன் வீட்டில் புதையல் இருப்பதாகவும், பூஜைகள் செய்து அந்த புதையலை எடுத்து தருகிறேன் என்று கூறியுள்ளார் டேனியல் சித்தர். அப்படி எடுத்து தராவிட்டால் நீங்கள் கொடுத்த பணம் முழுவதையும் திருப்பி தருவதாக கூறி 12 லட்சம் வரை முருகையன் மற்றும் நாகப்பன் என்பவரிடமிருந்து டேனியல் சித்தர் மோசடி செய்துள்ளார்.
பெரும் பணத்தை இழந்த பின்பும் எந்த பலனும் கிடைக்கவில்லை என்பதால் விரக்தி அடைந்த முருகையன் விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திலும், ரோசனை காவல் நிலையத்திலும் புகார் அளித்தார். அதனடிப்படையில் போலி சாமியார் டேனியல் சித்தரிடம் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ரோசனை பகுதி காவல்துறையினர் டேனியல் சித்தர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். இந்த சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Discussion about this post