நெல்லை மாநகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள உடையார்பட்டியில் அதிக அளவில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக காவல்துறையினருக்கு தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தது. அதன் அடிப்படையி அந்த பகுதியில், காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டு அடிக்கடி சோதனையிட்டும் வந்துள்ளனர்.
இதில் ஆத்திரமடைந்த உடையார்பட்டி பகுதியை சேந்த கஞ்சா வியாபாரியான மதன், அவருடைய நண்பர்களுடன்
கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாரிடம் தகவல் அளித்த நபர்களை மிரட்டுவதற்காக, அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் சாலையின் நடுவே நின்றுகொண்டு போகின்ற, வருகின்றவர்களை கத்தியை வீசி மிரட்டியுள்ளார்.
இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் அளித்த நிலையில், சம்பவ இடத்திற்கு போலீசார் வருவதை அறிந்த அடாவடி பேர்வழிகள், அங்கிருந்து ஓட்டம் பிடித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக நெல்லை சந்திப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்டமாக பயங்கர ஆயுதங்களுடன் சாலைகளில் சுற்றித் திரிந்ததாக வெள்ள பாண்டி என்பவரை போலீசார் கைது செய்துள்ள நிலையில், இந்த சம்பவத்தில் தொடர்புடைய மதன் அவருடைய மற்ற நண்பர்களை தேடிவருகின்றனர்.
பயங்கர ஆயுதங்களுடன் சாலையில் சுற்றித்திரிந்த போதை ஆசாமிகள், இருசக்கர வாகன ஓட்டிகளை மிரட்டும் சிசிடிவி காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.