பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் குடிநீர் விநியோகம் தடைபடாது

உதகை நகராட்சியின் முக்கிய குடிநீர் ஆதாரமான பார்சன்ஸ்வேலி அணையின் நீர்மட்டம் குறைந்தாலும் குடிநீர் தட்டுப்பாடு இல்லையென நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

உதகை நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளில் ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். இவர்களுக்கு நகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள அணைகளில் இருந்து குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. உதகை நகருக்கு முக்கிய குடிநீர் ஆதாரமாக விளங்குவது பார்சன்ஸ்வேலி அணை. இதுதவிர மார்லிமந்து, டைகர்ஹில் உள்ளிட்ட அணைகளிலிருந்தும் தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

தென்மேற்கு பருவமழை இதுவரை சரிவர பெய்யாததாலும், குடிநீர், மின் தேவைக்காகவும் அணையில் இருந்து தொடர்ச்சியாக நீர் எடுக்கப்படுவதால் நீர்மட்டம் சற்று குறைந்துள்ளது. அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் இருந்து தற்போது 22 அடிக்கு மட்டும் நீர் இருப்பு உள்ளது. இருப்பினும், மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்வதில் எந்தவித சிக்கலும் ஏற்படாது என நகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Exit mobile version