ஆழியார் அணையின் நீர்மட்டம் 100 அடியை எட்டியது

தென்மேற்குப் பருவமழை தீவிரம் அடைந்ததை அடுத்து, 55 அடியில் இருந்த ஆழியார் அணையின் நீர்மட்டம், படிப்படியாக உயர்ந்து 100 அடியை எட்டியது. இதனால் ஆழியார் அணை பாசன விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும், அணை, அதன் முழுக் கொள்ளளவான 120 அடியை ஒரு மாதத்திற்குள் எட்டும் என விவசாயிகள், பொதுமக்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். ஆழியார் அணைக்கு நீர் வரத்து ஆயிரம் கன அடிக்கு மேல் உள்ளதால், மிக விரைவில் அணை நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேபோல், கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையின் நடுவே அமைந்துள்ள பில்லூர் அணை இவ்வாண்டு மூன்றாவது முறையாக நிரம்பியுள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து உபரியாக பவானி ஆற்றில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் பவானி ஆற்றில் மீண்டும் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

வெள்ள பெருக்கு காரணமாக கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது அணையின் நீர் மட்டம் 97 அடியாகவும், நீர் வரத்து மற்றும் வெளியேற்றம் 10 ஆயிரம் கனஅடியாகவும் உள்ளது.

Exit mobile version