வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால், சென்னை மக்களின் குடிநீர்த் தேவைக்கு சிரமம் இருக்காது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடலூர் மாவட்டம் புவனகிரி அருகே உள்ள வீராணம் ஏரி 47 புள்ளி 5 அடி கொள்ளளவை கொண்டது. இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், சென்னை நகருக்கும் குழாய் மூலம் இங்கிருந்து தண்ணீர் கொண்டுசெல்லப்படுகிறது. மேட்டூரில் இருந்து திறந்துவிடப்பட்டுள்ள நீர், கல்லணை, கொள்ளிடம் ஆறு, வடவாறு ராஜவாய்க்கால் வழியாக வீராணம் ஏரிக்கு வந்துகொண்டிருக்கிறது. இதனால் அணையின் நீர்மட்டம் தற்போது 47 அடியை எட்டி வருகிறது. இன்னும் ஓரிரு நாட்களில் வீராணம் ஏரி முழுக் கொள்ளளவை எட்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையின் குடிநீருக்காக அணையிலிருந்து நொடிக்கு 30 கனஅடி என்கிற கணக்கில் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. ஏரியில் போதுமான அளவில் தண்ணீர் இருக்கும்படி பராமரித்து வரும் தமிழக அரசுக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.