ரயிலில் இரவு 10 மணிக்கு மேல் செல்போனில் சத்தமாக பேசவோ, பாட்டு கேட்கவும் கூடாது என ரயில்வே நிர்வாகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.இரவு நேரங்களில் ரயில் பயணம் செய்யும் பயணிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை இந்திய ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி, ரயிலில், இரவு 10 மணிக்கு மேல் எந்த ஒரு பயணியும் தங்களது செல்போனில் சத்தமாகப் பேசக் கூடாது என்றும் அதிக சத்தத்துடன் பாட்டு கேட்கக் கூடாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், மின் விளக்குகளை அணைத்து விடவேண்டும் என்றும், இரவு நேர விளக்குகள் மட்டும் பயன்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. குறிப்பாக இரவு 10 மணிக்கு மேல் டிக்கெட் பரிசோதகர், பயணிகளைத் தொந்தரவு செய்யக் கூடாது என்பது போன்ற, பல்வேறு புதிய விதிகளை இந்திய ரயில்வே நிர்வாகம் பிறப்பித்துள்ளது. இதனை மீறுவதைக் கண்டறிந்தால், பயணிகள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.