முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்பினர்.
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு மருத்துவர்களில் ஒரு தரப்பினர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு கனிவுடன் பரிசீலிக்கும் என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அறிவித்து இருந்தார். பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு மருத்துவர்கள் பணிக்கு திரும்ப வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதையடுத்து பெரும்பாலான அரசு மருத்துவர்கள் தங்களது பணிக்கு திரும்பினர். ஒரு தரப்பினர் மட்டும் வேலைநிறுத்தத்தை தொடர்ந்த நிலையில், இன்று காலைக்குள் அவர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அவர்களது பணியிடங்கள் காலி பணியிடங்களாக அறிவிக்கப்பட்டு புதிய மருத்துவர்கள் உடனடியாக நியமிக்கப்படுவார்கள் என்று சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இறுதி கெடு விதித்தார். இந்த நிலையில், முதலமைச்சர் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சரின் வேண்டுகோளை ஏற்று, அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தத்தை திரும்ப பெற்று பணிக்கு திரும்பினர்.