பூனைக்குட்டி வெளியே வந்துட்டது என்பது போல திமுக கூட்டணிக்குள் நிகழும் முட்டல் மோதல் தற்போது அம்பலமாகியுள்ளது. அதுவும் சட்டமன்றத்தில் திமுக கொண்டுவந்து வாபஸ் பெற்ற தொழிலாளர் நலச்சட்டதிருத்தம் தான் கூட்டணிக் குஸ்தியை அரசியல் களத்துக்குள் இழுத்து வந்துள்ளது.
கூட்டணிக்கட்சியின் தலைவர்களையோ, தனது சொந்தக் கட்சியின் தொழிற்சங்க நிர்வாகிகளையோ பெயரளவுக்குக் கூட கலந்தாலோசிக்காமல், சர்வாதிகாரியாக மாறி தொழிலாளர்களின் வேலைநேரத்தினை 12 மணி நேரமாக்கி சட்டப்பேரவையில் சட்டத்திருத்தத்தை கொண்டுவந்தார் ஸ்டாலின்… இந்த தொழிலாளர் விரோத சட்டத்திருத்தத்துக்கு எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கடுமையான எதிர்ப்புகளை முன்வைத்தார். பல்வேறு தொழிற்சங்கங்களும் திமுக அரசின் தொழிலாளர் விரோத போக்கை கண்டித்தன. அதே போல திமுக கூட்டணித் தலைவரின் ஏதேச்சதிகார சட்டத்திருத்தத்துக்கு விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், தமுமுக உள்ளிட்ட கட்சிகளின் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, திமுக தொழிற்சங்கத்தினரும் குமுறியிருந்தனர். இப்படி சுற்றிலும் கிளம்பிய எதிர்ப்புகளால் யூடர்ன் அடித்த ஸ்டாலின், அந்த சட்டத்திருத்தத்தை வாபஸ் பெற்றிருக்கிறார்.
இப்படி திமுகவின் பல்வேறு திட்டங்கள் குறித்த ஏதேச்சதிகாரப் போக்குக்கு திமுக கூட்டணிக் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தாலும், அந்த கட்சிகளை எல்லாம் கருவேப்பிலையாகப் பாவித்து திமுக அதனைக் கண்டுகொள்வதுஇல்லை என்பதும் கண்கூடு. இந்த நிலையில் மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சி நடத்திய மே தின பொதுக்கூட்டத்தில், மூத்த தொழிற்சங்க தலைவரும், முன்னாள் எம்பியுமான டி.கே.ரங்கராஜன் பேசுகையில் ஒன்று பட்டு போராடியதால்தான் ஸ்டாலின் கொண்டுவந்த 8 மணி வேலை நேரத்தை நீக்கும் சட்டத்தை அவரே திரும்பப் பெற்றுள்ளார். தமிழகத்தை திமுக அரசு ஆட்சி செய்கிறதா? அல்லது அதிகாரிகளும், முதலாளிகளும் சேர்ந்து ஆட்சி செய்கிறார்களா? அதிகாரிகள் அரசை தவறாக வழி நடத்துகிறார்கள். திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமானால் இந்த சட்டத்தை கொண்டு வரக் காரணமான அதிகாரிகளையும் பணியிலிருந்து விடுவிக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த செய்தி தீக்கதிர் நாளிதழிலும் வெளியான நிலையில், உண்மையை சொல்லிட்டீங்களே என்று ஆவேசப்பட்ட திமுக தரப்பு முரசொலியில் டி.கே.ரங்கராஜனை சகட்டு மேனிக்கு சாடியிருக்கிறது. திமுக அரசை அதிகாரிகள் தவறாக வழிநடத்துகிறார்கள் என்று தவறான தகவலை டி.கே.ஆருக்கு சொன்னது யார்? எதை வைத்து அவர் சொல்கிறார்? எந்த முதலாளி இந்த ஆட்சியை நடத்துகிறார்? டி.கே.ஆர் ஏன் இதனை சொல்ல வேண்டும்? பொத்தாம் பொதுவாக நாலாந்தரப் பேச்சாளர் போல கூட்டணியில் இருந்து கொண்டே பொதுவெளியில் கூக்குரலிடுவதுதான் கூட்டணி தர்மமா? அப்படி ஒரு அவதூறு குற்றச்சாட்டை கூட்டணிக் கட்சியான சி.பி.எம். தனது அதிகாரப்பூர்வ நாளிதழில் தலைப்பு போட்டு வெளியிடலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு சி.பி.எம். கட்சியை தவறாக யாரோ வழிநடத்தி வருகிறார்கள் என்றும், திமுக அரசு தொடர்ந்து இருக்க வேண்டுமா… என்று சொல்லும் தகுதியோ, யோக்கியதையோ டி.கே.ஆர். போன்றோருக்கு இல்லை என்றும் கூறியுள்ளது.
திமுகவின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய விகடன் இதழ் குறித்து ஏற்கனவே முரசொலி தரக்குறைவான வார்த்தைகளால் திட்டித் தீர்த்தது. இப்போதும் ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டியதால் மார்க்சிய கம்யூனிஸ்ட் மூத்த தலைவரை வசைபாடியிருக்கிறது.
என்னதான் கூட்டணியில் இருந்தாலும் எங்களை எதிர்த்ததை ஜனநாயகம் என்று மார்தட்டிய ஸ்டாலின், இன்று கேள்விகேட்டதை விமர்சிப்பது ஏன்? கூட்டணிக் கட்சி என்றால் திமுகவிற்கு அடிமையாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறதா திமுக?
கூட்டணி என்பதற்காகவே திமுகவிடம் அடிமையாக ஏன் இருக்கிறது மார்க்சிஸ்ட் கட்சி என்றெல்லாம் கருத்துகளை கொட்டி வருகின்றனர் இதனை உற்று நோக்கும் அரசியல் நோக்கர்கள்.
ஒருபக்கம் திமுகவுக்குள் நடக்கும் கூட்டணிக் குஸ்தியை இது வெளிப்படுத்தினாலும் இன்னொரு பக்கம் தனது ஆட்சியை குறை சொல்லும் ஊடகங்கள் தொடங்கி கட்சி தலைவர்கள் வரை சகட்டுமேனிக்கு திட்டித் தீர்ப்பது, போலீசைக் கொண்டு மிரட்டுவது என்று ஹிட்லரிசத்தை ஸ்டாலின் கையாண்டு வருகிறார் என்பதையே இது வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறது.