சாதிப் பெயரை சொல்லி திமுக பேரூராட்சி மன்றத் தலைவர் திட்டியதால், தூய்மைப் பணியாளர் மனமுடைந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், பேரூராட்சி மன்றத் தலைவர் என்பதால் போலீஸார் அவர் மீது நடவடிக்கை எடுக்கத் தயங்குவதாக உயிரிழந்தவரின் மனைவி குற்றம்சாட்டுகிறார்… இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்…
தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணியாற்றியவர் சுடலை மாடன். 25 ஆண்டுகளாக துப்புரவு பணியாளராக பணியாற்றிய இவருக்கு முறைப்படி பதவி உயர்வு கடந்த ஆண்டு கிடைத்துள்ளது. சுடலை மாடனுக்கு கிடைத்த பதவி உயர்வை அளிப்பதற்கு, உடன்குடி பேரூராட்சி தலைவராக உள்ள ஹிமேரா ரமீஷ் பாத்திமா, 5 லட்சம் ரூபாய் லஞ்சம் கேட்டு பதவி உயர்வு அளிக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளார். லஞ்சம் கொடுக்க முடியாது என சுடலை மாடன் தெரிவித்தபோது, அவரை சாதிய பெயரை சொல்லி, பேரூராட்சி தலைவர், முன்னாள் தலைவர், செயல் அலுவலர் பாபு ஆகியோர் தொடர்ந்து திட்டியுள்ளனர். இதில் மனமுடைந்த சுடலைமாடன், கடந்த மார்ச் மாதம் தற்கொலை செய்து கொண்டார். மேலும் தனது தற்கொலைக்கு காரணம், பதவி உயர்வு வழங்க லஞ்சம் கேட்டு வற்புறுத்தியதோடு, பலர் முன் சாதி பெயரை சொல்லி திட்டிய உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹிமேரா ரமீஷ் பாத்திமா, அவரது மாமியார் முன்னாள் தலைவர் கல்சியா, உடன்குடி தேர்வு நிலை பேரூராட்சியின் செயல் அலுவலர் பாபு ஆகியோர்தான் காரணம் என கூறி இருந்தார். இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர், திமுக பேரூராட்சி தலைவராக உள்ள ஹிமேரா ரமீஷ் பாத்திமா உள்ளிட்டோர் மீது எவ்வித நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வந்தனர்.
இது குறித்து தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, இது குறித்த விசாரணை சூடு பிடித்து உள்ளது. மேலும் தமிழக அரசின் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்திலும் பாதிக்கப்பட்டோர், தரப்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த நிலையில் பாதிக்கப்பட்ட நபர்களிடம் இது தொடர்பான விசாரணை சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையத்தில் மேற்கொள்ளப்பட்டது.
தூய்மைப் பணியாளரின் தற்கொலைக்கு காரணமான பேரூராட்சி தலைவர் மீதான புகாரை விசாரிக்க விடியா அரசின் ஏவல்துறை தயக்கம் காட்டுவது ஏன்? என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.