கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்பதைப் போல, அவசரகதியில் கொண்டு சட்டம் கொண்டுவருவது, பின்னர் உடனடியாக அதை வாபஸ் வாங்குவது என்று பம்மாத்து காட்டிக்கொண்டிருக்கிறார் ஸ்டாலின்… இதுவரை அந்தர் பல்டி அடித்துக்கொண்டிருந்த ஸ்டாலின் தற்போது யூடர்ன் அடித்தது குறித்து விளக்குகிறது இந்த தொகுப்பு.
மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி எனக்கு கவலை இல்லை?
எங்களின் மனசாட்சியே நீதிபதி என்று கருணாநிதி சொல்வார். அப்படித்தான் நானும் செயல்பட்டு வருகிறேன். சட்டப்பேரவையில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் சட்டத்திருத்தம் குறித்த கேள்விக்குத்தான் இப்படி எல்லாம் பதில் அளித்திருக்கிறார் ஸ்டாலின்…
உண்மைதான்… மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதைப் பற்றி உங்களுக்கு கவலை இருந்ததில்லைதான்.. அதனால் தான் உங்கள் கட்சியின் தொழிற்சங்க நிர்வகிகளுடனோ… அல்லது வேறு வழியின்றி உங்களுடன் கூட்டணி வைத்துக் கொண்ட கட்சிகளின் தலைவர்களுடனோ பெயரளவுக்கு கூட கலந்துரையாடாமல், இப்படி தொழிலாளர்களின் வேலை நேரத்தை 12 மணி நேரமாக்கும் சட்டத்திருத்தத்தை கொண்டு வந்தீர்கள்.
உலகமெங்கும் தொழிலாளர்கள் மேற்கொண்ட போராட்டங்களும், அவர்களின் உயிரிழப்புகளுமே 8மணி நேர வேலை என்பதை சாத்தியமாக்கி இருக்கிறது. அதனை மே தினமும் நினைவுப்படுத்திக் கொண்டே இருக்கிறது. அப்படியான மே தின கொண்டாட்டத்துக்கு முந்தைய வாரம் பாரம்பரியமிக்க தமிழக சட்டப்பேரவையில் தொழிலாளர் விரோத திருத்தச் சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறீர்கள்…
ஆனால் உங்களைப் போன்று தொழிலாளர்கள் மீது அக்கறையற்றவர்கள் அல்ல என்பதால்தான் இந்த திருத்தச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி. பல்வேறு தொழிற்சங்கங்களும் இந்த திருத்தச் சட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகளை முன்னெடுத்தன. ஏன் திமுகவின் தொழிற்சங்கத்தினரும், திமுக கூட்டணிக் கட்சியினரும் கூட எதிர்ப்பு குரல் கொடுத்துள்ளனர். சட்டமன்றத்தில் திமுகவின் பலத்தைக் காட்டி எப்படியும் சட்டத்தை நிறைவேற்றலாம் என்றிருந்த உங்களின் எதேச்சதிகாரம், சுற்றிலும் சூழ்ந்து நிகழ்ந்த எதிர்ப்பு தாக்குதல்களால் சுக்குண்டு போனது. இதற்குப்பிறகும் மக்களின் எதிர்ப்புகளை சந்திக்க முடியாது என்னும் அச்சம் மேலிட்ட நிலையில் சட்டத்தை முடக்கி வைத்து அதனை வாபஸும் பெற்றுள்ளீர்கள். ஆனாலும் வழக்கம்போல கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்னும் கதையாக மக்களின் எண்ணத்தைப் புரிந்து செயல்படுவதே மக்களாட்சி. அப்படி எடுக்கப்பட்ட முடிவு அது.
பலத்தை வைத்து இந்த சட்டத்தை கொண்டு வரப்படவும் இல்லை. பலவீனமாக இதனை வாபஸ் பெறவும் இல்லை என்றெல்லாம் கூறியிருக்கிறீர்கள்.
தொழிலாளர் சட்டத்திருத்த மசோதாவை மட்டுமல்ல, திருமண நிகழ்ச்சி நடைபெறும் அரங்கங்களிலும் மதுபானம் பரிமாற அனுமதி அளிக்கலாம் என்று கொண்டு வந்த அரசாணையையும் எதிர்க்கட்சிகள், பொதுமக்களின் எதிர்ப்புகளால் திரும்பப் பெற்றுக் கொண்டுள்ளது ஸ்டாலினின் அரசு…
எந்த திட்டமிடல்களும் இல்லை… சொல்பேச்சு கேட்கும் நிலையிலும் இல்லை… மக்கள் நலன் கருதாமல் தான்தோன்றித் தனமாக எடுக்கும் முடிவுகள்… எதிர்ப்பு வந்தால் மட்டும் பின்வாங்குவது என்று திமுக யூடர்ன் அரசாகவே மாறிப் போயிருக்கிறது… மீண்டும் ஆட்சியில் இருந்தும் யூடர்ன் ஆகி, முடங்கப்போகும் காலமும் வெகு தூரமில்லை….