டெல்லி அரசியலை மையப்படுத்தி தேசிய கட்சிகளை ஒருங்கிணைப்பதாகக் கூறிவரும் ஸ்டாலினால் சொந்தக் கட்சியை கட்டுக்குள் வைக்க முடியவில்லை என்பதை திருச்சி சிவா வீட்டில் நடைபெற்றுள்ள தாக்குதல் அம்பலப்படுத்தியுள்ளது. அதுகுறித்து பார்ப்போம்.
பொதுவெளியில் சமத்துவம், சமூக நீதி பேசும் திமுகவில் உள்கட்சிப்பூசலும், கோஷ்டி மோதலும் நீருபூத்த நெருப்பாகவே இருந்து வருகிறது. அவ்வப்போது பூனைக்குட்டி வெளியே வந்துவிடும் என்பது மாதிரி அந்த கோஷ்டிபூசலும் அம்பலத்துக்கு வந்துகொண்டுதான் இருக்கும்.
திருச்சி திமுகவுக்குள்ளே இந்த கோஷ்டி பூசல் எப்பவுமே பூதாகரமாகத்தான் இருக்கிறது. அமைச்சர்களான கே.என்.நேருவும், அன்பில் மகேஷும் தங்களுக்கு தனித்தனி கூட்டத்தை சேர்த்துக்கொண்டு, வெளிய பார்ப்பதற்கு ஒத்துமையாக தெரிஞ்சாலும் உள்ளே எலியும் பூனையுமாத்தான் இருக்கிறார்கள் என்பது உடன்பிறப்புகளே ஒத்துக் கொள்ளுற உண்மை.
சீனியரான நேருவை கொஞ்சம் தட்டி வைக்கிறதுக்காகத்தான் அன்பில் மகேஷை வளர்த்துவிட்டிருக்கிறார்கள் என்றும் ஒரு பேச்சு உள்ளது. அதே நேரம் தன்னோட மகனுக்கான கூட்டத்தை சேர்த்துக் கொள்வதற்காகத்தான் அன்பில் மகேஷை வளர்த்து வருவதாகவும் சொல்லப்படுகிறது.
இந்த ரெண்டு பேரும் இல்லாம இன்னொருவரும் திமுகவில் தனி கோஷ்டி வைத்திருக்கிறார் என்றால் அவர் திருச்சி சிவாதான். ஆனால், மனிதர் டெல்லியிலயே இருக்கிறதால் பெரிதாக அவருடைய கோஷ்டிகள் திருச்சியில் வளர முடியவில்லை எனும் ஆதங்கமும் இருக்கிறது. அதைவிட நேருவையும், அன்பில்மகேஷையும் தாண்டி சிவாவால் திருச்சிக்குள் அரசியல் செய்ய முடியாது என்பதும் உடன் பிறப்புகளோட தகவல்தான்.
இப்படி நீருபூத்த நெருப்பா இருக்கிற திருச்சியில் உட்கட்சி அரசியல் கோஷ்டி மோதல் வெடிச்சதால், புதன்கிழமை திருச்சி சிவா வீட்டுல் கல்லெறி சம்பவங்களும், கார் கண்ணாடி உடைப்பும் நடந்திருக்கிறது. அவரோட வீட்டுக்கு பக்கத்துல இருக்கிற டென்னிஸ் மைதான திறப்பு விழா ஒன்று நடந்திருக்கிறது. அதற்கான திறப்பு விழாவில் நேரு பங்கேற்ற நிலையில், அந்த அழைப்பிதழில் திருச்சி சிவாவுடைய பெயர் போடாமல் விட்டிருக்கிறார்கள். இது சம்பந்தமாக சிவாவோட ஆதரவாளர்கள், நேருவுக்கு எதிராக கோஷம் போட்டதோட, அவரோட காரையும் மறிச்சதாக சொல்லப்படுகிறது.
அவ்வளவுதான் பொங்கி எழுந்த நேருவோட ஆதரவாளர்களான மாநகராட்சி கவுன்சிலர்கள் முத்து செல்வம், காஜாமலை விஜய் உள்பட 10க்கும் மேற்பட்டவர்கள் சிவாவோட வீட்டுக்கு வந்து கல்லைத் தூக்கி எறிஞ்சதோட, பைக்குகளை தள்ளிவிட்டும், கார் கண்ணாடி, பிளாஸ்டிக் சேரையெல்லாம் உடைத்தும் அராஜகத்தில் ஈடுபட்டுள்ளார்கள்.
இந்த சம்பவம் நடந்த பொழுது அங்கு இருந்த போலீஸ்காரர்கள் தடுக்க வில்லையென்று சொல்லப்படுகிறது. அதற்கு பிறகு இன்னும் சில போலீஸ்காரர்கள் அங்கு வந்தபிறகு உடைந்த சேர் எல்லாம் காவல் வாகனத்தில் எடுத்துப் போட்டதோடு ஒரு சிலரை பிடித்துவிட்டு சென்றிருக்கிறார்கள்.
சமத்துவம், சமூக நீதி பேசும் திமுக தலைவர் ஸ்டாலினுக்கு சொந்தக்கட்சிக்குள் நிலவும் கோஷ்டி மோதலையே தடுத்து, ஒத்துமையை ஏற்படுத்த முடியவில்லை. இதில் டெல்லி அரசியலுக்கு போறேன்… தேசிய கட்சிகளையெல்லாம் சேர்க்கப் போறேன் என்று சொல்வதெல்லாம், கூர ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போன கதைதான்!
Discussion about this post