அதிமுகவின் கொடியை தொடர்ந்து பயன்படுத்துவதோடு, பொதுச்செயலாளர் என்று கூறி, தொடர்ந்து சட்டத்துக்குப் புறம்பான செயலை சசிகலா செய்து வருவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் என தொடர்ந்து கூறிவரும் சசிகலாவிற்கு எதிராக, சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், டெல்லி உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம், தேர்தல் ஆணையம் எல்லாம், ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் செயல்படுவதே உண்மையான அதிமுக என்று கூறிய பின்னரும், சட்டத்தை மதிக்காமல் சசிகலா செயல்படுவதாக குற்றம்சாட்டினார்.
காவல்துறையிடம் புகார் அளித்தும், விடியா திமுக அரசின் கைப்பாவையான காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்த அவர், சசிகலாவுக்கு திமுக ஆதரவு அளிப்பதாகவும், அதிமுகவிற்குள் குழப்பத்தை ஏற்படுத்தி திமுக குளிர்காய நினைப்பதாகவும் விமர்சித்தார்.
சசிகலா மீது நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு அறிவுறுத்தக்கோரி நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு, 12ஆம் தேதி விசாரணைக்கு வருவதாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.
மேலும், மக்கள் தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே உடனடி சிகிச்சை பெறும் நோக்கில் தொடங்கப்பட்ட அம்மா மினி கிளினிக் மூடப்பட்டது, திமுகவின் அரசியல் உள்நோக்கம் எனவும் குற்றம் சாட்டினார்.
Discussion about this post