மாமா, மருமகன் என்றுதான் கார்ப்பரேட் திமுகவில் அடிக்கடி உச்சரிக்கப்படும். ஆனால் சமீப காலங்களாக அத்தை, மருமகன் என்று உறவுகளிடையே நடக்கும் அதிகார மோதல் திமுகவை பேசும் பொருளாக்கி இருக்கிறது.
இதில் அத்தை ஸ்டாலினின் சகோதரியான கனிமொழி எம்பி… மருமகன் என்பது ஸ்டாலினின் மகன் அமைச்சர் உதயநிதி.
என்றைக்கு திமுக ஸ்டாலினின் கரங்களுக்குச் சென்றதோ… என்றைக்கு தனது மகன் உதயநிதியை முன்னெடுக்க ஸ்டாலின் திட்டமிட்டாரோ அன்றைக்கே உச்சத்தில் இருக்கும் உறவுகளுக்குள் அதிகாரம் தொடர்பான ஈகோ யுத்தம் தொடங்கி விட்டது.
கருணாநிதி இருந்தவரை, மதுரையின் ஆகப்பெரும் அரசியல்வாதியாக பிம்பம் கட்டமைக்கப்பட்ட அழகிரியை, கருணாநிதியைக் கொண்டே கட்டுப்படுத்தி கடைசியில் கட்சியை விட்டே ஓரம் கட்டி வைத்தவர்தான் ஸ்டாலின். அத்தனைக்கும் காரணம் திமுக என்பது தனக்கும், தனக்குப் பிறகு மகன் உதயநிதிக்கும் என்னும் சுயநலம்தான். இதில் அவ்வப்போது ஸ்டாலினின் கண்களை உறுத்திக் கொண்டிருப்பவர் கனிமொழி… எங்கே தமிழகத்தில் அவரது அரசியல் செல்வாக்குப் பெருகிவிடக்கூடாது என்பதில் தொடக்கத்தில் இருந்தே கண்கொத்தி பாம்பாக இருந்ததால்தான், நாடாளுமன்ற தேர்தலில் மட்டுமே அவருக்கு வாய்ப்பு கொடுத்து டெல்லிக்கு அனுப்பி வைப்பதில் குறியாக இருந்தார்.
அவ்வப்போது குடும்பத்தில் ஏற்படும் சலசலப்பை கட்டுப்படுத்த, கட்சி ரீதியாகவும் அவருக்கு துணை பொதுச்செயலாளர் என்று பொறுப்பைக் கொடுத்தாலும் கனிமொழியால் அவ்வளவு அதிகாரம் காட்டமுடியுமா என்பது அவருக்கே வெளிச்சம். இப்படி அண்ணனோடு அரசியல் யுத்தம் நடத்திக் கொண்டிருந்த கனிமொழி இன்று மருமகன் உதயநிதியுடன் அரசியல் களத்தில் மோதிக் கொண்டிருப்பதாக காதைக் கடிக்கிறார்கள் விஷயம் தெரிந்தவர்கள்.
((திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே சாத்தான்குளத்தில் தந்தை, மகன் உயிரிழந்த விவகாரத்தில் இதற்கான அச்சாரம் போடப்பட்டதாகச் சொல்கிறார்கள். ஜெயராஜ், பெனிக்ஸ் உயிரிழப்பின் போது அவரது குடும்பத்துக்கு திமுக சார்பில் நிதியை கனிமொழி மூலமாக கொடுத்துவிட்ட மறுநாளே, உதயநிதியையும் அங்கே அனுப்பி வைத்தார் ஸ்டாலின். உதயநிதியை அனுப்பி வைத்தது அவர் மூலமாக தென்மாவட்ட அரசியல் அதிகாரமும் தனது கையில்தான் இருக்கிறது என்பதைக் காட்டுவதற்காகத்தான் என்று பரபரப்பாகப் பேசப்பட்டதோடு, நீருபூத்த நெருப்பாகவும் இருந்து வந்தது.))
இன்றைக்கு உதயநிதி எம்.எல்.ஏ, அமைச்சர், அடுத்ததாக துணை முதலமைச்சர் என்று திமுகவின் உயர்ந்த அதிகார மட்டத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருக்க, கனிமொழியோ திமுக குடும்பத்தால் கண்டுகொள்ளப்படாமல் ஓரம் கட்டப்பட்டு வருவதாகவே தெரிவிக்கிறார்கள் அரசியல் நோக்கர்கள். ((சாதி ரீதியான பாசத்தில்,)) கனிமொழிக்கு ஆதரவு தெரிவித்து நெருக்கம் காட்டிய தெற்கு மாவட்ட அமைச்சர்கள் கூட இன்று தங்களின் அரசியல் லாபத்துக்காக வாரிசு அமைச்சருக்கு பல்லக்கு தூக்கத் தொடங்கி விட்டதால் கனிமொழி தனிமைப் படுத்தப்பட்டிருக்கிறார் என்கிறார்கள். இதற்கு அச்சாரமாக தூத்துக்குடியில் உதயநிதி கலந்து கொண்ட அரசு ஆய்வுக் கூட்டம், திமுக செயல்வீரர்கள் கூட்டம் எதற்கும் கனிமொழியை முறையாக அழைக்காமல் புறக்கணித்ததாக சொல்லப்படுகிறது. ஆனாலும் ((இனப் பாசத்தில்)) கனிமொழியை விரும்பும் தூத்துக்குடி திமுகவினர் செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், கூட்டம் காற்றாட, விழா ஏற்பாட்டாளர்களிடம் உதயநிதி கடுமை காட்டியதாக சொல்கிறார்கள்.
இப்படி அத்தைக்கும் மருமகனுக்கும் இடையே அரசியல் சதுரங்கம் நடப்பதில், வாரிசுகளை லைம் லட்டுக்கு கொண்டுவரும் நகர்வுகளும் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. உதயநிதியின் மகன் இன்பநிதியை, எழும்பூரில் விளையாட்டு அரங்க திறப்பு விழாவில் முன்னிலைப் படுத்திய நிலையில், கனிமொழியின் மகன் ஆதித்யாவையும் அரசியல் வெளிச்சத்துக்கு கொண்டுவரும் வேலைகள் நடந்து வருகிறதாம்…
அதுசரி திமுகவில் வாரிசுகளும் உறவுகளும்தான் அதிகாரத்தை கைப்பற்றும் போட்டியில் இருக்கிறார்கள். தொண்டன் எப்போதும் தொண்டனாக மட்டும்தான் இருக்க வேண்டும் என்பது திமுகவில் எழுதப்படாத விதிதான்!