ராஜீவ் கொலை வழக்கில், தண்டனை பெற்று 29 ஆண்டுகளாக சிறையில் அடைபட்டுக் கிடக்கும் நளினி, முருகன் உள்ளிட்ட 7 பேர் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதில் அ.தி.மு.க உறுதியாக உள்ளது. ஆனால், இதே விவகாரத்தில், தி.மு.க எப்போதும் இரட்டை வேடம் போட்டு, காலத்துக்கொரு நிலைப்பாட்டை கடைபிடித்து வந்துள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டு 29 ஆண்டுகள் ஓடிவிட்டன. அந்தக் கொலையில் நேரடியாகச் சம்பந்தப்பட்ட தனு, ராஜீவ் காந்தியோடு உடல் சிதறிப் பலியாகிவிட்டார். ராஜீவ் கொலைக்குக் காரணமாகச் சொல்லப்பட்ட விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாமல் போய்விட்டது. ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்ட, பெரும் புள்ளிகள் விசாரணை வளையத்திற்குள்ளாகவே வரவில்லை.
குறிப்பாக, ராஜீவ் கொலை நடந்த அன்று, ஸ்ரீபெரும்புதூர் பக்கத்தில், கருணாநிதி கலந்து கொள்ளும் தி.மு.க பிரச்சாரக் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால், திடீரென அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. அது ஏன் ரத்து செய்யப்பட்டது? என சி.பி.ஐ கருணாநிதியிடம் அப்போது கேள்வி எழுப்பியது. அந்தக் கேள்விக்கு கருணாநிதியிடம் அன்று பதில் இல்லை. அதே கேள்விக்கு, தி.மு.க-விடம் இன்று வரை பதில் இல்லை.
இப்படி சந்தேகங்கள்… மர்மங்கள்… பெரும்புள்ளிகளின் மாயங்களால் சூழப்பட்டது ராஜீவ் கொலை வழக்கு விசாரணை. ஜெயின் கமிஷன் விசாரணை முதல்… ஓய்வு பெற்ற சி.பி.ஐ அதிகாரி தியாகராஜன் வாக்குமூலம் வரையில், அதற்கு ஏகப்பட்ட உதாரணங்கள் இருக்கின்றன.
உண்மை அப்படி இருக்கையில், சந்தர்ப்ப சூழ்நிலையால், ராஜீவ் கொலை வழக்கில் சிக்கியவர்களில் நளினி, முருகன், பேரறிவாளன் உள்பட ஏழு பேர் மட்டும் நிரந்தர ஆயுள் தண்டனை பெற்று, 28 ஆண்டுகளாக சிறைக்குள் அடைபட்டுக் கிடக்கின்றனர். அவர்களின் விடுதலைக்கு, சட்டப்படியான காரணங்கள் முட்டுக்கட்டைகளாக நிற்கின்றன.
எத்தனை தடைகள் இருந்தாலும், அவற்றை தகர்த்து ஏழு பேரையும் விடுதலை செய்வதில் உறுதியாக இருக்கிறது முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு. இப்போது மட்டுமல்ல… எதிர்கட்சி வரிசையில் இருந்தபோதும் அ.தி.மு.க-வின் அந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் ஏற்பட்டதில்லை. கடந்த 9 ஆண்டுகளாக தொடர்ந்து, ஆட்சியில் இருக்கும்போதும், அந்த நிலைப்பாட்டில், அ.தி.மு.க தலைமையிலான அரசுக்கு எந்தத் தடுமாற்றமும் ஏற்படவில்லை.
ஆனால், 7 பேர் விடுதலை விவகாரத்தில், தி.மு.க-வின் நிலைப்பாடு ஒருபோதும் உறுதியாக இருந்ததில்லை. ஆளும் கட்சியாக இருந்தபோது ஒரு நிலைப்பாடு… காங்கிரஸ் கட்சியோடு கூட்டணி போட்டு, மத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்தபோது ஒரு நிலைப்பாடு… மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சியை இழந்து, அதிகாரம் பறிபோன இன்றைய நிலையில் வேறோரு நிலைப்பாடு என காலத்துக்கொரு வேடம் போட்டுக் கொண்டிருக்கிறது தி.மு.க.
குறிப்பாக, கடந்த 1996 முதல் 2000-மாவது ஆண்டு வரை தி.மு.க ஆட்சியில் இருந்தபோது, ராஜீவ் கொலை வழக்கில் கைதானவர்கள் நிலை குறித்துப் பேசிய கருணாநிதி, நளினிக்கு மட்டும் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக மாற்றலாம் என்றும், மற்றவர்களுக்கு உச்ச நீதிமன்றம் அளித்த தூக்குத் தண்டனையை நிறைவேற்றலாம் என்றும் ஒப்புதல் கொடுத்தார். அந்தக் கொடூர வார்த்தைகளை தமிழகம் ஒருபோதும் மறக்காது. ஆனால், அதை மறைத்துவிட்டு, மறந்துவிட்டதுபோல் நடிக்கும், இன்றைய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், 7 பேர் விடுதலை குறித்து உளறிக் கொண்டிருக்கிறார்.
2007-ல் தி.மு.க ஆட்சியில் இருந்த நேரத்தில், மத்தியில் காங்கிரஸ் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. காங்கிரஸ் கட்சி முன்னிறுத்திய பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவரானார். அவர் பேரறிவாளன், சாந்தன், முருகனின் கருணை மனுக்களை நிராகரித்தார். அதையடுத்து, தமிழகத்தில் ஆட்சியில் இருந்த கருணாநிதி, பேரறிவாளன், சாந்தன், முருகனைத் தூக்கில் போடும் வேலையில் வேகமாக இறங்கியது.
இதையடுத்து மூன்று பேரின் தூக்குத் தண்டனைக்கு, நீதிமன்றத்தில் தடை கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் மூன்றுபேரின் தூக்குத் தண்டனைக்கு தடை விதித்தது. ஆனால், தி.மு.க-வின் பங்காளியான காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு, அன்று மதியமே உச்ச நீதிமன்றத்தில் ஒரு மனுவைத் தாக்கல் செய்தது. அதில், பேரறிவாளன், சாந்தன், முருகனை உடனே தூக்கில் போட உத்தரவிட வேண்டும் என்று கேட்டது. அதுபற்றி அன்றைக்கு கருணாநிதி வாயே திறக்கவில்லை.
கருணை மனு காலதாமதம் செய்யப்பட்டதை காரணமாக வைத்து, பேரறிவாளன், சாந்தன், முருகனுக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை உச்ச நீதிமன்றம் ரத்து செய்தது.
2014-ம் ஆண்டு பிப்ரவரி 18-ம் தேதி வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த அந்தத் தீர்ப்பு வெளியானது. ஆனால், அன்றைய சூழலில், மூன்று பேரின் தூக்குத் தண்டனை ரத்தானதோடு மட்டும் இல்லாமல், நளினி, முருகன் உள்பட 7 பேரும் சிறையில் இருந்து விடுதலையாவதற்கான அருமையான வாய்ப்பும் இருந்தது. அதற்கு தன் அறிக்கை ஒன்றின் மூலம் முட்டுக்கட்டை போட்டவர் கருணாநிதி. 7 பேர் விடுதலை குறித்து, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சதாசிவம் தெரிவித்த கருத்தை எதிர்த்து அப்போது, கருணாநிதி அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அது நீதித்துறை வட்டாரத்தில் பூகம்பத்தை ஏற்படுத்தியது. அதனால் 7 பேரின் விடுதலை அப்போது சாத்தியப்படவில்லை.
கருணாநிதியின் இந்த வில்லத்தனத்தைப் புரிந்து கொண்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வெளியானதற்கு மறுநாளே அமைச்சரவையைக் கூட்டி, 7 பேரையும் மாநில அரசு விடுதலை செய்யும் என தீர்மானம் நிறைவேற்றியது.
அதில் டெல்லி அதிர்ந்து போனது. உடனே காங்கிரஸ் கட்சி, அ.தி.மு.க அமைச்சரவை எடுத்த முடிவுக்கு உச்ச நீதிமன்றத்தில் இடைக்காலத் தடை பெற்றது. இதையடுத்து, தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தின், வழிகாட்டுதலின் படி வழக்கறிஞர்கள் குழு உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசின் வாதங்களை தீர்க்கமாக எடுத்துரைத்தனர். இருதரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றம், 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பின் அடிப்படையில், புதிய உத்தரவை பிறப்பித்தனர். அதில், 161-வது பிரிவின் கீழ், 7 பேர் விடுதலை குறித்து மாநில அரசு முடிவு எடுக்கலாம் என தீர்ப்பளித்தனர்.
அதனைத் தொடர்ந்து, 2018 செப்டம்பர் 9-ம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டப்பட்டது. தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இல்லாத வகையில், மாலை 4 மணிக்கு அவசரமாகக் கூட்டப்பட்ட அமைச்சரவைக் கூட்டம், இரண்டு மணி நேரம் நடைபெற்றது. அதில், சட்டப்பிரிவு 161 மாநில அரசுக்கு அளித்துள்ள அதிகாரத்தின் படியும், உச்ச நீதிமன்ற உத்தரவுப்படியும், 7 பேரை விடுதலை செய்கிறோம் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அது, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது ஆளுநர் தான் அதில் முடிவெடுக்க வேண்டும்.
இதையெல்லாம் தெரிந்துகொண்டே இரட்டை வேடம் போடும் தி.மு.க-வும், அதன் கூட்டணி கட்சிகளும், 7 பேர் விடுதலையில் உண்மையான அக்கறை கொண்ட அ.தி.மு.க அரசுக்கும், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் அவப்பெயர் ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், தில்லுமுல்லுகளை அரங்கேற்றி வருகின்றன. இதை தமிழக மக்கள் நன்கு அறிவார்கள். அதனால், தி.மு.க-வின் அரசியல் தில்லுமுல்லுகள் வழக்கம்போல், இந்த விவகாரத்திலும் எடுபடப்போவதில்லை என்பதை காலம் உணர்த்தும்.
Discussion about this post