திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே, அட்டவணைப் பிரிவு சமூகத்தைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவரை தரக்குறைவாக பேசி, தாக்கிய திமுக நிர்வாகிகள் மீது, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
நரியம்பட்டு ஊராட்சி மன்றத் தலைவராக இருப்பவர் பாரதி. இவர், கடந்த மாதம் பொறுப்பேற்ற பின், ஊராட்சி செயலாளர் நிரஞ்சனா என்பவரிடம் கணக்கு, வழக்குகளை கேட்டுள்ளார். இன்று, நாளை என தட்டிக்கழித்து வந்த அவர், பேர்ணாம்பட்டு திமுக ஒன்றிய துணைச் செயலாளர் சேகரை வைத்து பஞ்சாயத்து செய்துள்ளார்.
அப்போதிலிருந்து, ஊராட்சி மன்ற தலைவர் செய்யக்கூடிய ஊராட்சி பணிகளை, திமுக ஒன்றிய கவுன்சிலரின் கணவரும், திமுக மாவட்ட பொறியாளர் அணி துணை அமைப்பாளருமான ராஜன்பாபுவும் அத்துமீறி தலையிட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், நரியம்பட்டு ஊராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு பகுதியில், ராஜன்பாபு, அவரது சகோதரர் பிரதீப் உள்ளிட்ட திமுகவினர் மின்மோட்டார் அமைக்கும் பணியை செயல்படுத்தியுள்ளனர்.
இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவர் பாரதி கேட்டதற்கு, ஊராட்சி எங்க கண்ட்ரோல் என்று கூறி மிரட்டி, ஒருமையில் தகாத வார்த்தைகளால் பேசியதுடன், தாக்கியதாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து அளித்த புகாரின் பேரில், திமுக நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.