சென்னை மடிப்பாக்கத்தில் திமுக வட்டச் செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
மடிப்பாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்த செல்வம் என்பவர் 188-வது வார்டு திமுக வட்டச் செயலாளராக பொறுப்பு வகித்து வந்தார். இவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட மனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தநிலையில், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக திமுக நிர்வாகிகளுடன் பேசிக் கொண்டிருந்தபோது, அங்கு சென்ற 8 பேர் கொண்ட கும்பல், பட்டாகத்தியால் சரமாரியாக வெட்டியுள்ளனர்.
தலை, முகம், கை போன்ற இடங்களில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
தகவல் அறிந்து அங்கு சென்ற காவல்துறையினர் அவரது உடலை குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதையடுத்து, செல்வத்தின் ஆதரவாளர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
திமுக வட்டச் செயலாளர் கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கண்டுபிடிக்க ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. உள்ளாட்சித் தேர்தல் போட்டி காரணமாக திமுக வட்டச் செயலாளர் வெட்டி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திமுகவுக்குள் இருந்த முன்விரோதம் மற்றும் மோதல் போக்கு தற்போது நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட சீட் கிடைக்காத விரக்தியால் கொலை வரை சென்றுள்ளது.
இரண்டு தினங்களுக்கு முன்பு நெல்லை பாளையங்கோட்டையில் 35வது வார்டு திமுக வட்ட செயலாளர் பொன்னுதாஸ் கொலை செய்யப்பட்ட நிலையில், நேற்றிரவு மடிப்பாக்கத்தில் 188-வது வார்டு திமுக வட்ட செயலாளர் செல்வம் கொலை செய்யப்பட்டிருக்கிறார்.
திமுக நிர்வாகிகளை சொந்த கட்சியினரே பதவி வெறி பிடித்து கொலை செய்து வருவது அக்கட்சியினரை கலக்கமடைய வைத்துள்ளது.
Discussion about this post