திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே திருட்டு வழக்கில் திமுக பிரமுகரை, தனிப்படை போலீசார் கைது செய்த நிலையில், திமுகவினர் உதவியுடன் தனிப்படை போலீசாரை தாக்கிவிட்டு திமுக பிரமுகர் தப்பிச்சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் துத்திப்பட்டு ஊராட்சி மன்ற தலைவராக திமுகவை சேர்ந்த சுவிதா உள்ளார். சுவிதாவின் கணவரான திமுக பிரமுகர் கணேஷ் மீது மீது, பல்வேறு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், திமுக பிரமுகர் கணேஷ், அவரது மனைவியும் ஊராட்சி மன்ற தலைவருமான சுவிதா ஆகியோர் ஆதரவாளர்களுடன் எல்.மாங்குப்பம் பகுதிக்கு சென்றனர். அப்போது, கோவையில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் அவர்களை சுற்றி வளைத்தனர்.
திருட்டு வழக்கில் திமுக பிரமுகர் கணேஷை தேடி வந்த தனிப்படை போலீசார் அவரை பிடித்து வாகனத்தில் ஏற்றி கைவிலங்கிட்டுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கணேஷின் ஆதரவாளர்கள், தனிப்படை போலீசாரை சுற்றிவளைத்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன், அவர்களை தாக்கியுள்ளனர்.
ஒருபுறம் காவலர்களை தாக்கிய கும்பல் மற்றொருபுறம் வாகனத்தில் இருந்து திமுக பிரமுகர் கணேஷை மீட்டு சென்றனர். பின்னர் அங்குள்ள வெல்டிங் கடைக்கு அழைத்து சென்று திமுக பிரமுகர் கணேஷ், கைகளில் பூட்டப்பட்ட கைவிலங்கை வெல்டிங் மூலம் உடைத்துள்ளனர்.
பின்னர் தனிப்படை போலீசாரிடம் இருந்து சிக்காமல் இருக்க திமுக பிரமுகர் கணேஷ் அவரது ஆதரவாளர்கள் உதவியுடன் அங்கிருந்து தப்பி சென்றார்.
திமுக ஆதரவாளர்கள் தாக்கியதில் கோவை தனிப்படை தலைமைக் காவலர் ராஜாமுகமது மற்றும் காவலர் வடிவேலு ஆகிய இருவரும் காயம் அடைந்ததால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
திமுகவினரின் அராஜகம் குறித்து உமாராபாத் காவல் நிலையத்தில் தனிப்படை காவலர்கள் புகார் அளித்தனர். இந்த நிலையில் தனிப்படை காவலர்களை தாக்கியதாக திமுகவை சேர்ந்த 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், தனிப்படை காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோடி தலைமறைவாக உள்ள திமுக பிரமுகர் கணேஷ், அவரது மனைவியும், ஊராட்சி மன்ற தலைவருமான சுவிதா உட்பட 7 பேரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.
திருட்டு வழக்கில் தொடர்புடைய திமுக பிரமுகரை கைது செய்யவிடாமலும், கைது செய்ய முயன்ற காவலர்களை தாக்கும் அளவிற்கு திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதால் திருப்பத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.