சென்னையில் மது, குட்கா, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களைத் தாண்டி தற்போது போதை மாத்திரைகளுக்கு இளைய தலைமுறை அடிமையாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இளைய தலைமுறையை சீரழிக்கும் போதை மாத்திரையை விற்பனையின் பின்னணியில் திமுகவை சேர்ந்த நிர்வாகிகள் இருப்பதும் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
வாழ்க்கையின் கடைசி கட்டத்தில் உயிருக்காக போராடும் கேன்சர் நோயாளிகள் அந்த நேரத்தில் படும் வலியையும், துயரத்தையும் போக்க வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மாத்திரைகள், குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை சாதகமாக பயன்படுத்திக்கொள்ளும் சமூக விரோத கும்பல்கள், கேன்சர் நோயாளிகளுக்கு வலி நிவாரணியாக பயன்படுத்தப்படும் மாத்திரைகளை மிக குறைந்த விலைக்கு வாங்கி, அதனை போதை மாத்திரையாக இளைஞர்களிடம் அதிக விலைக்கு விற்று பணம் பார்த்து வருகிறது. இந்த போதை மாத்திரையை உட்கொள்ளும் இளைஞர்கள் அடுத்த 6 மணி நேரத்திற்கு தங்களின் நிலையை மறப்பது தான் வேதனையின் உச்சம். மது, கஞ்சா ஆகியவை தரும் போதையை விட இரண்டு மடங்கு போதை இந்த மாத்திரைகள் மூலம் கிடைப்பதால், அதற்கு இளைஞர்கள் அடிமையாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
போதை மாத்திரை விற்பனைக்கென தனியாக பல வாட்ஸ் ஆப் குழுக்கள் இயங்குகின்றன. சென்னையிலும் இதே வாட்ஸ் ஆப் நெட்வொர்க் மூலமாகவே போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். குறிப்பாக பழைய வண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர், நொளம்பூர் தொடங்கி தற்போது தியாகராய நகர், அண்ணா நகர், சூளை, சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி போன்ற நகரின் மையப்பகுதிகளிலும் போதை மாத்திரை விற்பனை படு ஜோராக நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன் அடிப்படையில், விசாரணையில் இறங்கிய காவல்துறையினர், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த சன்னு, அல்லா பகேஷ், அருண், பாபு, விஜய் ஆகியோரை விசாரணை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர். விசாரணையில், மருந்துகளை குறிப்பிட்ட மருந்தகங்களில் இருந்தும், மருந்து விற்பனை செய்யும் ஏஜெண்டுகளிடம் இருந்தும் இரட்டிப்பு பணம் கொடுத்து வாங்கி அதைவிட அதிக பல மடங்கு கூடுதல் விலைக்கு விற்பனை செய்வது ஆளும் திமுக-வை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதில் முக்கிய புள்ளியாக கேரளாவை சேர்ந்த ரித்தீஷ் ராஜன், வண்ணாரப்பேட்டையை சேர்ந்த திமுக பிரமுகர்களான பாபு, அசாருதீன் மற்றும் அஸ்லாம், டியோ கார்த்திக் ஆகியோர் செயல்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட அசாருதீனின் தந்தை கழக பாபு, ராயபுரம் பகுதியில் 53வது வட்ட திமுக வர்த்தகர் அணி அமைப்பாளராக உள்ளார். திமுக நிர்வாகிகளான பாபு, குமரேசன் உள்ளிட்டோர் அசாருதீனிடம் கைகோர்த்து பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனை செய்வது தெரியவந்துள்ளது. போதை மாத்திரை தொடர்பாக விற்பனை திமுக பிரமுகர்கள் உட்பட இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
கஞ்சா, போதை மாத்திரை ஆகியவற்றுக்கு இளைஞர்கள் அதிகளவில் அடிமையாகி வருவதால், கொலை, கொள்ளை, வழிப்பறி போன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.
நியூஸ் ஜெ செய்திகளுக்காக செய்தியாளர் கதிரவன்.
((மது, குட்கா, கஞ்சா போன்ற போதைப் பொருட்களைத் தாண்டி போதை மாத்திரைகளுக்கு அடிமையாகும் இளம் தலைமுறை
மருந்து விற்கும் ஏஜெண்டுகளிடம் இரட்டிப்பு பணம் கொடுத்து வாங்கி, அதிக விலைக்கு விற்பனை செய்யும் திமுக பிரமுகர்கள்
சென்னையின் பல்வேறு இடங்களில் போதை மாத்திரை விற்பனை படுஜோராக நடைபெறுவதாக அதிர்ச்சி தகவல்
திமுக பிரமுகர்கள் உதவியுடன் பள்ளி மாணவர்களை குறிவைத்து போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டது அம்பலம்
போதை மாத்திரை விற்பனை தொடர்பாக திமுக பிரமுகர்கள் உட்பட இதுவரை 17 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்))
Discussion about this post