"இதுபோல் நிர்பந்தத்திற்கு ஆளானது இல்லை அதிகாரி கண்ணீர்”-திமுக அமைச்சர் மஸ்தான் நெருக்கடி

விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அமைச்சர் செஞ்சி மஸ்தான் மிரட்டலின் பேரில் நிர்பந்ததிற்கு உள்ளாக்கப்பட்டதாக வட்டார வளர்ச்சி அலுவலர் மன உளைச்சலில் கண்ணீர் வடிக்கும் ஆடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தலில், மரக்காணம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் பதவிக்காக திமுகவினர் இரண்டு கோஷ்டியாக போட்டியிட்டு அராஜகத்தில் ஈடுபட்டனர்.

இதனால் தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி பலத்த பாதுகாப்புடன் கடந்த 22-ம் தேதி மறுதேர்தல் நடத்தப்பட்டது. இதில், திமுகவை சேர்ந்த தயாளன், அர்ஜூனன் என்பவரைவிட அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், மறுதேர்தலிலும் திமுகவினர் அராஜகம் ஈடுபட்டு முறைகேடு செய்ததாக கூறி அர்ஜூனன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் அளித்த வாக்குகளின் படி தனக்கு 14 ஓட்டுகளும், தயாளனுக்கு 12 ஓட்டுகளும் பெற்றதாக மனுவில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டிய நிலையில், தேர்தல் அலுவலருக்கும், வட்டார வளர்ச்சி அலுவலருக்கும் அமைச்சர் செஞ்சி மஸ்தான் கொடுத்த அழுத்தம் காரணமாக தயாளன் வெற்றி பெற்றதாக முறைகேடாக அறிவிக்கப்பட்டதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இது ஒருபுறம் இருக்க, தனக்கு நிகழ்த்தப்பட்ட அநீதி குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசனிடம், அர்ஜூனன் கேட்டுள்ளார். அப்போது, 35 ஆண்டு கால அரசு பணியில், இது போன்ற நிர்பந்தத்திற்கு உள்ளானதில்லை என்றும், தன்னால் நிம்மதியாக தூங்க முடியவில்லை எனவும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீஷ் மனக்குமுறலை வெளிப்படுத்தியுள்ளார்.

வட்டார வளர்ச்சி அலுவலரின் கண்ணீரும் அச்சமும், திமுகவின் அதிகார குரூரத்தை வெளிப்படுத்தியுள்ளது. முறைகேடாக ஒன்றியக் குழுத் தலைவராக திமுக பிரமுகரை அறிவித்த அதே சூட்டில், மரக்காணம் ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலில் வேட்பு மனு வாங்கும் நடைமுறையை கூட பின்பற்றாமல், நேரடியாக பழனி என்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அர்ஜூனன் தனது மனுவில் குற்றம்சாட்டியுள்ளார்.

திமுகவினரால் ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் வகையில் நடத்தப்பட்ட இந்த தேர்தலை ரத்து செய்து விட்டு, மறு வாக்கு எண்ணிக்கை நடத்தி மரக்காணம் ஒன்றியக் குழு தலைவராக தன்னை அறிவிக்க வேண்டுமெனவும், ஒன்றிய குழு துணை தலைவர் பதவிக்கான தேர்தலை புதிதாக நடத்த உத்தரவிட வேண்டுமென மனுவில் கோரியுள்ளார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வில் ஓரிரு நாட்களில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version